×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு

வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகை ஆறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தவிர மூல வைகை ஆற்றை சார்ந்து ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் மூல வைகை ஆற்று நீர் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

ஒவ்வொருநாளும் மூல வைகை ஆற்றில் சாக்கடை கழிவுநீர் குளம் போல தேங்கி கலந்து வைகை அணைக்கு செல்கிறது பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் போதும் அதனுடன் கழிவுகள் சேர்ந்து குடிநீரை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கும் முதல் இரண்டு வாரங்கள் கழிவுநீர் கலந்து குடிநீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நிலை குறைவு ஏற்படுகிறது.

இது குறித்து வருசநாடு சமூக ஆர்வலர் தென்னரசன்‌ கூறுகையில் மூல வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களையும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மூல வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்கள் அனைத்திலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையாக அமைக்க வேண்டும் என்றார்.

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு appeared first on Dinakaran.

Tags : Molawaikai ,Kadamalai-Mylai ,Varusanadu ,Mola Vaigai river ,Vellimalai ,Kadamalai Mailai Union ,Mula Vaigai River ,Kadamalai-Mylai Union ,
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?