×

ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

*வீட்டையும், காலியிடத்தையும் மீட்டு தர கோரிக்கை

ஈரோடு : வீட்டையும், காலியிடத்தையும் மீட்டு தரக்கோரி தம்பதி ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கவுண்டம்பாளையம் பனங்காட்டு கொரை பகுதியை சேர்ந்த மாறன் (53). அவரது மனைவி சுலோச்சனா (45). இருவரும் நேற்று காலை ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது எஸ்பி அலுவலக வளாகத்திற்குள் வந்ததும், அவர்கள் மறைத்து வைத்திருந்த மண் எண்ணைய்யை கணவர், மனைவி இருவரும் மாறி, மாறி உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் இருந்த மண் எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
தொடர்ந்து, இருவரையும் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, மாறன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். எனக்கு பனங்காட்டு கொரையில் காலி இடத்துடன் கூடிய 5.5 சென்டில் தார்சு வீடும், கவுண்டன்பாளையத்தில் மெயின் ரோட்டில் 2.5 சென்ட் காலியிடமும் உள்ளது. எனது மகள்களின் திருமண செலவிற்காக எனக்கு நன்கு அறிமுகமானவரிடம் கடந்த 2017ம் ஆண்டு 2 ரூபாய் வட்டிக்கு ரூ.12 லட்சம் கடன் பெற்றேன்.

இத்தொகைக்கு மாதம் தவறாமல் வட்டி கட்டி வருகிறேன். 2019ம் ஆண்டு மேலும் ரூ.10 லட்சம் வட்டிக்கு கடன் கேட்டேன். அதற்கு அந்த நபர், ஏற்கனவே ரூ.12 லட்சம் கடன் உள்ளது. கூடுதலாக ரூ.10 லட்சம் கடன் வாங்கினால் வட்டி கட்ட முடியாது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ மூலமாக மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக நானும், அந்த நபரும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு அந்த நபர் மட்டும் அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு, என்னிடம் ரூ.25 லட்சம் கடன் தருவதாகவும், அதில், ரூ.10 லட்சம் மானியம். அதாவது ரூ.15 லட்சம் மட்டும் திரும்ப செலுத்தினால் போதும். வட்டி கிடையாது என கூறினார்.

மேலும், அரசு மானியம் பெற தொழில் செய்வதுபோல காட்ட வேண்டும் என அந்த நபர் என்னிடம் கூறினார். அதற்கு வீட்டு பட்டாவையும், காலியிடத்தின் பட்டாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என கூறியதன் பேரில், அனைத்து ஆவணங்களையும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு எடுத்து சென்று, அந்த நபர் சொல்லிய இடத்தில் நம்பி கையெழுத்திட்டேன். இதையடுத்து அந்த நபர் என்னிடம் 3 மாதத்தில் ரூ.25 லட்சம் பணமாக தாட்கோவில் இருந்து வந்து விடும். அதன்பின் எனக்கு சேர வேண்டிய ரூ.12 லட்சத்தை வட்டியுடன் கொடுத்து விட்டு கடன் பத்திரத்தை வாங்கி கொள் என்றார்.

ஆனால், அந்த நபர் கூறியபடி எனக்கு தாட்கோ கடன் கிடைக்கவில்லை. இதற்கிடையில் அந்த நபர் எனது காலியிடத்தில் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்தார். மேலும், எனது வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரை வந்து பார்க்க வைத்தார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, 2019ம் ஆண்டே வீட்டையும், காலியிடத்தையும் எனது பெயருக்கு கிரையம் செய்து வழங்கி விட்டாய் என்றார். நான் எப்போது உங்களுக்கு கிரையம் செய்து கொடுத்தேன் என கேட்டதற்கு, என்னை சாதி பெயரை சொல்லி, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

வீட்டை காலி செய்யவில்லை என்றால் ஜேசிபி வாகனத்தை விட்டு வீட்டை இடித்து விடுவேன் என கூறினார். இது தொடர்பாக பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புகார் அளித்தேன். அப்போது, இன்ஸ்பெக்டர் அந்த நபரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் ஒரு மாதத்தில் வீட்டையும், காலி இடத்தின் மீதுள்ள கிரையத்தையும் ரத்து செய்து எனது பெயரில் மறு கிரையம் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதன்பேரில், அந்த நபர் மீது நான் கொடுத்த புகாரை திரும்ப பெற்றேன். ஆனால், இன்று வரை காலி இடத்தையும், வீட்டையும் என் பெயருக்கு கிரையம் செய்து தரவில்லை. எனவே, அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது வீட்டையும், காலி இடத்தையும் மீட்டு தர வேண்டும். மேலும், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Erode SP ,Erode ,Kaundampalayam Panangattu Korai ,Kopi, Erode district ,Dinakaran ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...