×

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30.50 லட்சம் மோசடி: பெண் ஜோதிடர் கைது

ஈரோடு : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.30.50 லட்சம் பெற்று ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி ஒரிச்சேரிப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பூவழகன் (37). தமிழ் எம்ஏ படித்துள்ளார். இவரிடம், கவுந்தப்பாடி சலங்கபாளையம் அய்யன்காடு காரிய குப்பண முதலி வீதியை சேர்ந்த ஜோதிடர்களான அன்பானந்தன் (53), இவரது மனைவி கோகிலாம்பாள் (52) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு ரூ.5.50 லட்சம் பெற்றனர். ஆனால், அரசு வேலை வாங்கி தரவில்லை.

இதேபோல் அன்பானந்தனும், கோகிலாம்பாளும் ஈரோட்டை சேர்ந்த மலர் கொடியிடம் ரூ.5 லட்சமும், கவுந்தப்பாடி செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரியிடம் ரூ.20 லட்சம் பெற்று அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அன்பானந்தன் அவரிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஜாதகத்தில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், நிச்சயம் முயற்சி செய்தால் அந்த வேலை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்பானந்தன், கோகிலாம்பாள் இருவரும் ஜோதிடம் பார்க்க வந்தவர்களிடம், ‘‘நாங்கள் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்ப்பதால் எங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நன்றாக தெரியும். பணம் கொடுத்தால் கட்டாயம் அரசு வேலை வாங்கி தருகிறோம்’’ என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அன்பானந்தனின் மகளான ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் செவிலியராக பணியாற்றும் பவித்ரா (27), எனது அப்பாவும், அம்மாவும் பணம் கொடுத்துதான் எனக்கு அரசு செவிலியராக பணி வாங்கி தந்ததாக ஜாதகம் பார்க்க வந்தவர்களிடம் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

இப்படி கூட்டு சதியில் ஈடுபட்டு அவர்கள் 3 பேரிடம் ரூ.30.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். பவித்ராவின் பணி குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் கொரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்பானந்தனையும், கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அன்பானந்தனின் மகள் பவித்ராவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய அன்பானந்தனின் மனைவியான ஜோதிடர் கோகிலாம்பாள் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30.50 லட்சம் மோசடி: பெண் ஜோதிடர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,District ,Bhawani Oricheriptur ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது