×

பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி: 129 எம்எல்ஏக்கள் ஆதரவு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; லாலு கட்சியை சேர்ந்த சபாநாயகரும் பதவி நீக்கம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது. 129 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பீகார் மாநிலத்தில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. ஜனவரி 28ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ உதவியுடன் 9வது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றார். புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று பீகார் சட்டப்பேரவையில் நடந்தது.

243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்கள் தேவை. நேற்று அவை கூடியதும் லாலுபிரசாத் கட்சியை சேர்ந்தவரும், பீகார் சட்டப்பேரவை சபாநாயகருமான அவத் பிகாரி சவுத்திரிக்கு எதிராக பா.ஜ எம்எல்ஏ நந்த் கிஷோர் யாதவ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில் சபாநாயகருக்கு எதிராக 125 எம்எல்ஏக்களும், ஆதரவாக 112 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிகாரி சவுத்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். குரல் வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஆளும்கட்சி வரிசைக்கு சென்ற ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏக்கள் பிரஹலாத் யாதவ், சேத்தன் ஆனந்த், நீலம் தேவி ஆகியோர் நிதிசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து 129 ஓட்டுக்கள் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக கிடைத்தன. இதனால் பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ எம்எல்ஏக்கள் ஜெய்ராம் கோஷம் எழுப்பினார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் புதிய சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறும் என்று தெரிகிறது.

* பா.ஜ கூட்டணியை விட்டு இனிமேல் விலக மாட்டேன்
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் பங்கேற்று பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ‘2005ம் ஆண்டுக்கு முன்பு லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ஆட்சியில் பிகாரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் ஆட்சியில் யாருக்காவது இரவு நேரத்தில் வெளியே செல்ல தைரியம் இருந்ததார் சொல்லுங்கள் பார்ப்போம். முதலில் சாலை இருந்ததா? சாலை உட்பட எந்த வசதிகளும் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் இல்லை. வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து அவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். வாக்கு வங்கிக்காக முஸ்லிம்கள் குறித்து பேசுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதிகபட்ச கலவரங்கள் நடந்தன. அவர்களுடன் கூட்டணி அமைத்தபோது நான் அவர்களுக்கு மரியாதை கொடுத்தேன். ஆனால் அவர்களின் முறைகேடுகள் பற்றி அறிந்தபோது நான் வேதனையடைந்தேன். ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்களின் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். இந்தியா கூட்டணி மூலம் நான் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சித்தேன். ஆனால் என்ன நடந்தது. ஒன்றும் பலனளிக்கவில்லை. எனவே நான் எனது பழைய கூட்டணிக்கே திரும்பிவிட்டேன். இனி இவர்களை ஒருபோதும் விட்டு செல்லமாட்டேன்’ என்றார்.

* இருக்கை மாறிய எம்எல்ஏக்கள்: எச்சரித்த தேஜஸ்வி யாதவ்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் சேட்டன் ஆனந்த், நீலம் தேவி, பிரகலாத் யாதவ் ஆகியோர் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வரிசையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ‘வாக்கெடுப்பு முடியும் வரை எம்எல்ஏக்கள் அவரவர் இருக்கைகளில் வந்து அமருங்கள். இல்லையென்றால் உங்கள் வாக்குகள் செல்லுபடியாகாது’ என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.

* நிதிஷ் மீண்டும் பல்டி அடிக்க மாட்டாரா?
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நான் எப்போதும் என் தந்தை ஸ்தானத்தில் வைத்து மதித்தேன். எங்கள் கூட்டணியை கைவிட்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. 9வது முறையாக அவர் பீகார் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித முன்மாதிரியும் இல்லாத சாதனையாக அவர் மூன்றாம் முறையாக பதவி ஏற்றுள்ளார். நான் எப்போதும் நிதிஷ் குமாரை ‘தசரதர்’ (ராமாயண காவியத்தில் ராமர் தந்தை) என்றே கருதுகிறேன். பீகாரில் ‘மகாபந்தன்’ கூட்டணி ஆட்சியைக் கண்டு பாஜ பயந்தது. பச்சோந்தி நிதிஷ் குமார் இன்னொரு பல்டி அடிக்க மாட்டார் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் அளிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

The post பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி: 129 எம்எல்ஏக்கள் ஆதரவு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; லாலு கட்சியை சேர்ந்த சபாநாயகரும் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar Govt ,Bihar Assembly ,Speaker ,Lalu ,Patna ,Nitish Kumar government ,Bihar ,Lalu Prasad Yadav ,Rashtriya Janata Dal ,Congress ,Communist ,United Janata Dal ,Dinakaran ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...