×

இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி

* செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

* 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

* தனது பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து செந்தில்பாலாஜி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைசட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 13ம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

தற்போது, புழல் சிறையில் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜினாமாவை ஆளுநர் ஏற்ற பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!