×

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: ஆம்னி பேருந்து குறித்து இன்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு, அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை வெளிவட்ட சாலை, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிறுத்தும் இடம் மற்றும் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் வார இறுதி நாட்கள், முகூர்த்த நாட்களில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கம் குறித்தும், இம்முனையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்தும்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக கடந்த 9ம் தேதி 1,592 பேருந்துகளும், 11ம் தேதி 1,746 பேருந்துகளும் என மொத்தம் 3,338 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்கள் எழுந்து நிலையில் நாள் ஒன்றுக்கு திருச்சிக்கு 199 பேருந்துகளும், கும்பகோணத்திற்கு 125 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு 283 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

இது கடந்த பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட எண்ணிக்கைகளை விட அதிகம். பொதுவாக இரவு 12 மணிக்கு மேல் புறநகர் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை. அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதலே பேருந்துகளின் இயக்கம் தொடங்கும். இந்நடைமுறையே கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பின்பற்றப்பட்டு வந்தது. பேருந்துகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் இருப்பினை கருத்தில் கொண்டு இரவிலும் தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. பேருந்து வசதிகள் முழுமையாக வழங்கப்படுகிறது.

எனவே எந்த குழப்பமும் தேவையில்லை என்பது தான், இந்த நேரத்தில் நான் வைக்கும் வேண்டுகோள். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி. போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கசாவடி ஆகிய 2 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகளுக்கு பயணிகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை தவறுதலாக புரிந்து கொண்டு கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில் திங்கட்கிழமை (இன்று) உரிய தெளிவுரை கோரி நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: ஆம்னி பேருந்து குறித்து இன்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு, அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam Bus Terminal ,High Court ,Omni Bus ,Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Klambakkam bus terminal ,Mudichur ,Klambakkam ,Sivasankar ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...