×

டெல்லியை விவசாயிகள் நாளை முற்றுகை: அரியானா எல்லைக்கு சீல் வைப்பு

புதுடெல்லி: நாளை டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பல மாதங்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி எல்லைகளிலேயே முகாமிட்டு கடும் குளிரிலும் வெயிலும் உறைபனியிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 800 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஒன்றிய அரசு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. அப்போது அரசு தரப்பில் விவசாயிகளுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. குறைந்தபட்ச ஆதார விலை போன்ற வாக்குறுதிகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாஜவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நாளை டெல்லியில் பிரமாண்ட போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் 20,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்க உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்துவதை ஒடுக்க ஒன்றிய அரசு தயாராகிவிட்டது. டெல்லி எல்லைகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் துணை ஆணையர் ஜோய் டிர்க்கி கூறுகையில்,‘‘ விவசாயிகளின் இந்த அறிவிப்பையடுத்து வட கிழக்கு டெல்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது. டெல்லி- அரியானா, உபி எல்லைகளில் தடுப்புகள் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். இதனிடையே, அரியானாவில் முழுமையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதற்கும் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விவசாயிகளை தடுத்து நிறுத்த 50 துணைராணுவ படைப் பிரிவுகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

 

The post டெல்லியை விவசாயிகள் நாளை முற்றுகை: அரியானா எல்லைக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Ariana border ,New Delhi ,United Farmers Organizations and Agricultural Workers Organizations ,North East Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...