×

ரூ.211 கோடியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: தாம்பரம் மாநகராட்சி தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் ரூ.211 கோடியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இதில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 16.11.2020 அன்று தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்துக்கு உட்பட்ட பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் ரூ.211.15 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது. இத்திட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு, 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 14 வார்டுகளில் 11 வார்டுகளில் நடந்து வருகிறது. இதில், முதல்கட்டமாக பம்மல் பகுதிகளில் உள்ள 7 வார்டுகளிலும், 2ம் கட்டமாக அனகாபுத்தூர் பகுதியிலும், 3ம் கட்டமாக அனகாபுத்தூர் பகுதியில் 27 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவும் பணியும் நடந்தது. இந்த பணிகள் கடந்த 26.2.2021 அன்று தொடங்கியது.

ஆனால், கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக, பணிகள் தடைபட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு இந்த திட்டம் குறித்து பல்வேறு ஒப்புதல்கள் பெறப்பட்டு பணிகள் தொடங்கியது. இதில் பம்மல் பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி 45 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதற்காக இதுவரை 43.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. 2218 மேன்ஹோல் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கழிவுநீர் நீரேற்று நிலையங்களின் கட்டுமான பணிகள் சுமார் 55 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுவரை 30.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு, 1617 மேன்ஹோல் அமைக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் 27 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்துக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் இந்த பணியில் அனைத்தையும் விரைவாக முடிக்கும் முயற்சியில் ஏற்கனவே உள்ள ஆட்கள் மற்றும் இயந்திரங்களை அதிகரித்து பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை சேகரிப்பு அமைப்பு பணிகள், கழிவுநீர் நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும், பணிகள் முடியும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

The post ரூ.211 கோடியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: தாம்பரம் மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Bummal ,Anakaputtur ,Pallavaram ,Anagaputhur ,Pammel ,Sembakkam ,Perungalathur ,Birkankarani ,Tambaram Corporation Information ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...