×

தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்தில் பூங்காக்களோட அவலத்த பாருங்க… விளையாட்டு உபகரணங்கள் சேதம், விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், செம்பாக்கம் பகுதிகளில் பராமரிப்பில்லாமல் புதர்மண்டி காணப்படும் பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இதில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம், செம்பாக்கம் பகுதியில் உள்ள 41வது வார்டு, ராதேஷ் அவென்யூ பூங்கா, 42வது வார்டு அன்னை அஞ்சுகம் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால் பூங்காவில் சிறுவர்கள் விளையாடக்கூடிய உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையிலும், பூங்கா முழுவதும் புல் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து புதர் போலவும், பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இருக்கைகள் சேதமடைந்தும், மின்விளக்குகள் பழுதான நிலையிலும் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் பூங்காக்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பூங்காக்களை முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ராதேஷ் அவென்யூ பூங்காவிற்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர் – சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கும், மாலை நேரத்தில் பொழுதுபோக்கவும் வந்து செல்வது வழக்கம். ஆனால், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக பூங்காக்கள் அனைத்தும், எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் பாழடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

செம்பாக்கம் நகராட்சியாக இருந்தபோது தினமும் பூங்கா வளாகத்தை சுத்தம் செய்வது, செடிகளை முறையாக பராமரிப்பது, களைச்செடிகளை அகற்றுவது, தண்ணீர் ஊற்றி பராமரிப்பது, விளையாட்டு உபகரணங்களை பராமரிப்பது போன்ற பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் தினமும் பூங்காக்களுக்கு ஆர்வமுடன் வந்து சென்று கொண்டிருந்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்ட சில மாதங்களில் 3வது மண்டலத்துக்கு உட்பட்ட ராதேஷ் அவென்யூ பூங்கா, சரஸ்வதி நகர் பூங்கா, கவுஷிக் அவென்யூ பூங்கா, ஷாம் அவென்யூ பூங்கா, 42வது வார்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 2006ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது திறந்து வைத்த அன்னை அஞ்சுகம் பூங்கா உள்ளிட்ட எந்த பூங்காக்களும் பராமரிக்கப்படவில்லை. பூங்கா பராமரிப்பு திட்டத்தையே மாநகராட்சி கைவிட்டுவிட்டு பராமரிப்பு பணியில் இருந்த ஊழியர்களை குப்பை தரம் பிரிக்கும் பணிகளுக்கு அனுப்பி விட்டனர்.

குப்பையை கொண்டு சென்று தரம் பிரிப்பதற்கு என தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்து அந்த பணிகளை செய்து வருகிறது. அதில், மாநகராட்சி நிரந்தர ஊழியர்களை மாநகராட்சி பணியில் அமர்த்தியுள்ளது. இதனால், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறுவதில்லை. பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள், சிறுவர்கள் என யாரும் பூங்காக்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

செடிகள் அதிகளவில் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் கடிக்குமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில், 3வது மண்டலத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்திலும் புதிய மின் விளக்குகள் அமைத்து, பூங்காக்களை முழுமையாக சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை: மாமன்ற உறுப்பினர் வேதனை
பூங்காக்களின் அவலம் குறித்து மாமன்ற உறுப்பினர் கற்பகம் சுரேஷ் கூறியதாவது: பூங்காக்களை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் வழங்கியுள்ளோம். ஆனால், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் பொதுமக்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளோம். செம்பாக்கம் நகராட்சியாக இருந்தபோது ராதேஷ் அவென்யூ பூங்காவில் தினமும் மாலை நேரத்தில் அதிகப்படியான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வருவார்கள்.

பூங்காவின் உள்ளே நிகழ்ச்சி நடத்துவதற்கு என மேடை அமைத்து தந்ததால் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அதுதவிர சிறுவர்களுக்கு என ஷட்டில் கோட், பேட்மிண்டன் கோட் இருந்ததால் அவர்கள் விளையாட்டுகளை ஆர்வமாக விளையாடுவார்கள். சிறு குழந்தைகள் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். தற்போது பூங்கா பயன்பாட்டுக்கு இல்லாத நிலையில் உள்ளது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* அதிகாரிகளிடம் கேட்டால்…
பூங்காக்களுக்கு மாநகராட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது என தெரியவில்லை. பூங்கா பராமரிப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், பொறியாளர் பிரிவில் கேளுங்கள் என கூறுகிறார்கள். பொறியாளர் பிரிவில் கேட்டால், சுகாதார பிரிவில் கேளுங்கள் என கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு அதிகாரிகளும் மாறி மாறி பேசுகிறார்களே தவிர சரியான பதில் அளிப்பதில்லை. மேலும், பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுபோன்ற, மாநகராட்சி அதிகாரிகளின் செயல் மிகவும் மோசமாக உள்ளது. ராதேஷ் அவென்யூ பூங்காவில் கடந்த மிக்ஜாம் புயல், மழையின் போது விழுந்த மரத்தை கூட இதுவரை அகற்றாமல் வைத்துள்ளனர். அதோடு பூங்காவில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் பழுதான நிலையில் உள்ளதால், இரவு நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பூங்கா எந்த நேரமும் திறந்த நிலையில் உள்ளதால், மாலை 7 மணிக்கு மேல் காதல் ஜோடிகளும், இரவு நேரத்தில் குடிமகன்களும் பூங்காக்களை அவர்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

The post தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்தில் பூங்காக்களோட அவலத்த பாருங்க… விளையாட்டு உபகரணங்கள் சேதம், விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,zone ,Tambaram ,Sembakkam ,Pallavaram ,Anagaputhur ,Pammel ,Perungalathur ,Peerkankaranai ,Madambakkam ,Chitlapakkam ,Tiruneermalai ,Tambaram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...