×

கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்திடம் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை 2 மாதங்களில் மீட்க நடவடிக்கை: சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்திடம் உள்ள அரசுக்கு சொந்தமான 62,237 சதுர அடி நிலத்தை 2 மாதங்களில் மீட்க நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் கழகத்திற்கு (டான்சி) சொந்தமான 62,237 சதுர அடி நிலத்தில் ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்திற்கு கடந்த 1981 செப்டம்பர் 9ம் தேதி மாதம் ரூ.12,036 என்ற வாடகைக்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலத்தையும் அதில் உள்ள கட்டிடத்தையும் ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் பிளாஸ்க் மற்றும் அதுதொடர்பான பொருட்களை தயாரிக்க பயன்படுத்தி வந்தது.

இந்த நிறுவனத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு 2001 டிசம்பர் 21ம் ேததி வரை லைசென்ஸ் தரப்பட்டது. இந்த நிறுவனத்தை 2006 பிப்ரவரி 22ம் தேதி ஆய்வு செய்த தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டது என்று கூறி அந்த நிறுவனத்தின் பெயரை தொழிற்சாலைகள் ஆவணங்களில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தொடர்ந்து அந்த நிலத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இதையடுத்து, அந்த நிலத்தை காலி செய்யுமாறு டான்சி நிறுவனம் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் பதில் மனு தாக்கல் செய்த ஈகிள் பிளாஸ்க் நிறுவனம், தங்களது லைசென்ஸ் அப்போதைக்கப்போது புதுப்பிக்கப்பட்டு தொழிற்சாலை இயங்கி வருவதாகவும் தற்போது 15 தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த 14வது சிறு வழக்குகள் நீதிமன்றம், டான்சி தொடர்ந்த வழக்கை 2007 மார்ச் 2ல் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து டான்சி மேல் முறையீடு ெசய்தது. இந்த மேல்முறையீடு வழக்கு 7வது சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரமன்லால், வழக்கறிஞர் பி.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி, அரசுக்கு சொந்தமான நிலத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் பயன்படுத்தவில்லை. அங்கு பிளாஸ்க் தயாரிக்கப்படவில்லை. 3 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உயர் அழுத்த மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக மாற்றப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நிறுவனம் தற்போது உற்பத்தியை நிறுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, டான்சிக்கு சொந்தமான இடத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் காலி செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த 14வது சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த இடத்திலிருந்து ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்தை 2 மாதத்தில் அகற்ற டான்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post கிண்டி தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்திடம் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை 2 மாதங்களில் மீட்க நடவடிக்கை: சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kindi Industrial Estate ,Chennai Small Cases Court ,CHENNAI ,Eagle Flask ,Chennai Guindi Industrial Estate ,Guindi Industrial Estate ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...