×

பாஜ ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட தயாரா? அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழகத்தில் எடுபடாது; சாட்டையை சுழற்றும் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளில் இதுவரை ஒன்றை கூட தீர்க்கவில்லை. கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் நிரந்தர தீர்வு காண்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தனர். அதற்கு இதுவரை தீர்வில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது. பல மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது. நீட் தேர்வுக்கு ஒன்றிய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்எல்சி நிலம் எடுப்பு தொடர்பாக ஒன்றிய அரசு பாராமுகம் காட்டியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும். விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த விளம்பர அரசியல், தமிழகத்தில் எடுபடாது. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகள் செய்தார்கள் என பட்டியலிட அண்ணாமலை தயாரா?.

தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழர் நலனுக்கு எதிராகவே உள்ளன. தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே இபிஎஸ்சும் தற்போது எடுத்துள்ளார். தன்னிச்சையாக போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்று யார் பிரதமராக வருவார்? என்பதை அதிமுக தான் நிர்ணயம் செய்யும். பாஜவிற்கும், அதிமுகவிற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓபிஎஸ் கேட்கவில்லை. ஒருவேளை அண்ணாவையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் விமர்சித்ததை ஓபிஎஸ் ஏற்றுக் கொள்கிறாரா? அதிமுக கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. அனைத்து கூட்டணி கட்சிகளையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். நாங்கள் தற்போதுதான் பேச்சுவார்த்தை துவங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அதிமுக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post பாஜ ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட தயாரா? அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழகத்தில் எடுபடாது; சாட்டையை சுழற்றும் கடம்பூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Tamil Nadu ,Kadampur Raju ,Thoothukudi North District ,AIADMK ,former ,Minister ,Kadambur Raju ,MLA ,Kovilpatti ,Bajja ,Tamils ,Kachchathivu ,Cauvery ,Mullai Periyar ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...