×

ஐதராபாத் சென்ற போது பயங்கர விபத்து சென்னை சொகுசு பஸ் மீது லாரி மோதி 7 பேர் பலி

திருமலை: சென்னையில் இருந்துசென்ற சொகுசு பஸ் மீது ஆந்திராவில் இரும்புலோடு லாரி மோதியதில் 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு பஸ் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், காவலி முசுனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் மறுபுறம் தாறுமாறாக வந்த இரும்பு லோடு ஏற்றிவந்த மற்றொரு லாரி, மஞ்சள் லோடு லாரி மீது பயங்கரமாக மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த சொகுசுபஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. பஸ்சில் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கிய நிலையில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். அதேபோல் 2 லாரிகளின் டிரைவர்களும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 7 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து காவலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் சிக்கிய பயணிகள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், படுகாயம் அடைந்த நபர்களின் விவரம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவரின் தூக்க கலக்கத்தால் இந்த கோர விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் சென்னையை சேர்ந்தவராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. அதிகாலை நடந்த கோர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஐதராபாத் சென்ற போது பயங்கர விபத்து சென்னை சொகுசு பஸ் மீது லாரி மோதி 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hyderabad ,Tirumala ,Andhra Pradesh ,Hyderabad, Telangana ,
× RELATED தெலங்கானா மாற்றுத்திறனாளி விடுதியில்...