×

இந்த வார விசேஷங்கள்

திருநாங்கூர் கருட சேவை 10.2.2024 – சனி

மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழிக்கு அருகே திருநாங்கூர்மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. அதில் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் ஆண்டுக்கொரு முறை கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். வேத வடிவமானகருடாழ்வார் மீது வேதத்தின் பொருளான இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருடசேவை’. உற்சவத்தின் சிறப்பு நிகழ்வாக, திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து நாராயணப் பெருமாள்(மணிமாடக் கோயில்), குடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம் ), செம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்), பள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), அண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), புருஷஷோத்தமப் பெருமாள் (வண்புருஷஷோத்தமம்), வரதராஜன் (திருமணிக்கூடம்), வைகுந்த பெருமாள் (வைகுந்தவிண்ணகரம்),மாதவ பெருமாள்
(திருத்தேவனார் தொகை), பார்த்த சாரதி (திருபார்த்தன்பள்ளி), கோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூர் மணிமாடக்கோயில் பந்தலில் எழுந்தருள, திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.

பிறகு, ஆழ்வாரும் எம்பெருமான்களும் உள்மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்கள். அங்கே ஒரே நேரத்தில் எல்லா எம்பெருமான்களுக்கும் திருமஞ்சனசேவை நடைபெறுகின்றது. பிறகு, அந்தந்த எம்பெருமான்களுக்குக் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரம் ஆகிறது.இந்தியா முழுவதிலிருந்தும் இந்தகண்கொள்ளாக் காட்சியைக் காண மக்கள் வெள்ளம் திரண்டு நிற்கிறார்கள். ஆங்காங்கு, உபன்யாசம், இன்னிசை, நாம சங்கீர்த்தனங்கள், என்று திருநாங்கூர் களைகட்டி நிற்கிறது. இரவு 11 மணிவரை தரிசனமும் ஆராதனைகளும் நடக்கிறது. இவைகள் முடிந்து இரவு 12 மணியளவில் கருடசேவை புறப்பாடு நடக்கிறது. 11 பெருமாள்களும் தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பர். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருளுவார். மணவாளமாமுனிகளும் எழுந்தருளுகிறார். பின்பு, வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும். விடியவிடிய கருடசேவை உற்சவம் நடைபெறும். அடுத்த நாள் மாலை திருவெள்ளக் குளம், திருத்தேவனார்தொகை, திருவாலி ஆகிய தலங்களில் திருமங்கையாழ்வார் எழுந்தருள, திருப்பாவை, திருமஞ்சனச் சாற்று மறையும் நடைபெறஉள்ளன. பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைந்த பிறகு வயலாலி மணவாளன் கருடசேவையும், திருமங்கையாழ்வார் மங்களாசாசனமும் நடைபெறும்.

அப்பூதி அடிகள் குருபூஜை 11.02.2024 – ஞாயிறு

கும்பகோணம் திருவையாறு சாலையில் திருவையாறுக்கு அருகேகாவிரியின் வடகரைத் திருத்தலமாக விளங்குகிறது திங்களூர். அங்கே வாழ்ந்துவந்தார்அப்பூதி அடிகள். சமய குரவர்களில் அப்பர் என்ற திருநாமம் உடைய திருநாவுக்கரசர் மீது காணாமலே காதல் கொண்டு அவர் பெயரிலேயே தர்மங்கள்பலவற்றைச் செய்துகொண்டிருந்தார். அவரை ஒருமுறை சந்திக்கிறார். திருநாவுக்கரசரைக் கண்டதும் ஏக மகிழ்ச்சி. ஒப்பற்ற ஞான தரிசனம் கிடைத்த பூரிப்பு. நெகிழ்கிறார். நெக்குருகி நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குகிறார். வீட்டுக்கு விருந்துண்ண அழைக்கிறார். திருநாவுக்கரசரும் அன்புக்குக் கட்டுப்பட்டு ஏற்கிறார். விருந்து தயாராகிவிட்டது.விருந்துக்கு முன் வாழை இலைஅறுக்க செல்கிறான் அப்பூதியடிகளின் விஷ்ணுபிரியா மகன். அங்கே மறைந்திருந்த பாம்பு தீண்டி இறந்துவிடுகிறான். அழுவதற்கும் நேரமில்லை.

விருந்து கெடுமே.. திருநாவுக்கரசர் வெளியே சென்று வீட்டுக்கு வரும் நேரம். அவர் அறிந்தால் கஷ்டப் படுவார்…. என்ன செய்வது? பிள்ளையின் சடலத்தை ஒரு பாயை வைத்து கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு திருநாவுக்கரசரின் வருகையை எதிர்நோக்கி விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தயங்காமல் செய்கின்றனர். திருநாவுக்கரசரும் வந்துவிட்டார். அழகான வாழை இலையில் அன்னமும் கறிகளும் அழகாகப் பரிமாறி இருக்கும் வேளையில், திருநாவுக்கரசர் பூசனைகள் புரிந்து வெண்ணீறு பிரசாதமாக இருவருக்கும் தந்து, ‘‘ஆமாம், இங்கே விளையாடிக்கொண்டிருந்த தங்கள் புதல்வன் எங்கே? கூப்பிடுங்கள். என்னோடு விருந்து உண்ணட்டும்’’ என்று கேட்கும் போதுதான், அதுவரைஇல்லாத மயக்கம் வருகின்றது.

‘‘சுவாமி அவன் தங்களுக்கு இப்போது உதவான்’’ அவன் இறந்துவிட்டான் என்று சொல்லவில்லை. ஒரு கணம் திகைத்தார் திருநாவுக்கரசர்‘‘ஏன்?’’ இப்போதுவரை இங்கு விளையாடிக்கொண்டிருந்தான்… அவன் எங்கே? உண்மையைச் சொல்லும்’’. பெரியவரின் விருந்திற்கு விரோதம் வரும் என்று சொல்லியாக வேண்டிய நிலை. நடந்த கதையைச் சொன்னார்கள்.‘‘நல்லது செய்தீர் ஐயா, நல்லது செய்தீர். இந்த வயோதிகனுக்கு விருந்து படைக்க வேண்டும் என்று வயசுப் பிள்ளையைப் பறிகொடுத்து, அதனை மறைத்துக் கொள்ளும் துணிவா? யாராவது இப்படிச் செய்வார்களா? அவனை இங்கே கொண்டு வாருங்கள். நீலம் பாரித்துக் கிடந்த பிள்ளையைகொண்டு வந்து கிடத்துகிறார்கள். அடுத்து அவர் உதட்டிலிருந்து பரம கருணையோடு வெளிப்படுகின்றது ஒரு பதிகம்.

“ஒன்று கோலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கோலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கோலாம் இடு வெண்தலைகையது
ஒன்று கோலாம் அவர் ஊர்வது தானே’’

விடம் தீர்க்கும் பதிகம் என்பார்கள். திருநாவுக்கரசரின் தமிழமுதம் அந்த பச்சிளம் பாலகனைக் காத்தது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து வந்து பெற்றோர்களைக் கட்டிக் கொள்கின்றான். திருநாவுக்கரசர் திருப்பாதங்களில் சிறுவனோடு விழுந்து பணிகின்றார்கள். இன்று அப்பூதி அடிகளாரின் குரு பூஜைநாள்.

திருவள்ளூர் வீரராகவர் தீர்த்தவாரி 12.2.2024 – திங்கள்

சென்னையில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில். இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்ததேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர். தை பிரம்மோற்சவம் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தீர்த்தவாரி. இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்தஹிருத் தாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள்அனைத்தும் விலகும், என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும், வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.

மாதப்பிறப்பு – விஷ்ணுபதி புண்ய காலம் – சதுர்த்தி விரதம் 13.2.2024 – செவ்வாய்

12 ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ, அந்த ராசிதான் அந்தமாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது. உத்திராயணத்தின் முதல் ராசியானமகர ராசியில், சூரியன் நுழையும் காலம், விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது, விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம் ஆகும். வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டும். பெருமாள்சந்நதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேகஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய, மனம் அமைதி பெறும். இந்தநாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜைஆகியன செய்வது மிகவும் பலன் தரும்.

சஷ்டி -வைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம் 15.2.2024 – வியாழன்

இத்தலம், திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், வைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும், தாமிரபரணியாற்றின் வடகரையில் உள்ளது. மூலவர்: வைகுந்தநாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம். உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்) தாயார்: வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார் (தாயார்களுக்கு தனித்தனி சந்நதி) நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த  கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம், சூரிய தோஷபரிகார ஸ்தலம் ஆகும். இன்று வைகுண்டம் கள்ளபிரானுக்கு சிறப்பு பால் அபிஷேகம். இன்று தை மாதத்தின் சஷ்டிவிரதம், தொடர்ந்து சஷ்டிவிரதம் இருப்பவர்களுக்கு அறிவுக்கூர்மையும், ஆற்றலும், செயல் திறனும் கூடும். குடும்ப உறவுகள்மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.
சஷ்டிவிரதம் இருப்பவர்கள், முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்தநாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப் பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யவேண்டும். மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு மலர்மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூபதீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

ரத சப்தமி – நத்தம் மாரியம்மனுக்கு பால் காவடி 16.2.2024 – வெள்ளி

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாகவாழ்வார்கள் என்பது நம்பிக்கை. ரத சப்தமி நன்னாளில் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து, நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம். சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அப்படி குளிக்கும் போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள்வைக்கவேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். எருக்கன் இலைஅடுக்கைத் தலைமீது வைத்து குளிக்கவேண்டும். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில், நத்தம் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகுவிமரிசையாககொண்டாடப்பட்டு வருகிறது. மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பால் காவடி உற்சவம்.

திருக்கண்ணபுரம் பிரம்மோற்சவம் 16.2.2024 – வெள்ளி

வைணவத் திவ்யதேசங்களில் திருக்கண்ணபுரம் மிகச்சிறந்த திருத்தலம். இங்குதான் எட்டெழுத்து மந்திரத்தின் தத்துவத்தை திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் எடுத்துச் சொன்னார். ஏழு
புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. ஐந்து கிருஷ்ண ஆரண்ய தலங்களில் ஒன்று. நீலமேகப் பெருமாள், சௌரிராஜ பெருமாள் என்ற திருநாமத்தோடு பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல, அபயக் கரத்துடன் இல்லாமல், தானம் பெறும் கரத்துடன் உள்ளார்.கண்ணபுரத்து நாயகி என்று தாயாருக்கு பெயர். பத்மினி என்றும் இவருக்கு பெயர் உண்டு. இந்த விமானத்திற்கு உத்பலா பதேகே விமானம் என்று பெயர். திருக்கோயிலை வலம் வரும் போது, இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு.திருக்கண்ணபுரத்தில் பெருமாளுக்கு மாசி மகத்தை ஒட்டி பிரம்மாண்டமானபிரம்மோற்சவம் நடைபெறும். இன்று, அதன் கொடி ஏற்றம். மாலை திக் பந்தனம் முடிந்து, சுவாமி உத்பலாவதக விமானத்தில் வீதி உலா.

விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Tirunangur ,Garuda ,Seva ,Sirkazhi, Sani Mayiladuthurai district ,Narayana Perumal ,Manimatakoil ,
× RELATED திருவள்ளூர்  வைத்திய வீரராகவர்...