×

இல்லாதவர்களுக்கு செய்!

நன்றி குங்குமம் தோழி

– ஆயி பூரணம் அம்மாள்

‘‘சிறகு கிடைத்தால் பறப்பது மட்டுமா வாழ்க்கை…
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் வாழ்க்கை..!!’’

வாழ்க்கை முழுதும் துயரங்களைச் சுமந்தவர் ஆயி பூரணம் அம்மாள். பார்க்க ரொம்பவே எளிமையாக இருக்கிறார். ஆனால் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை அரசுப் பள்ளிக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, தனது செயற்கரிய செயலை கொஞ்சமும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பதிவு செய்த ஆவணத்தை அசால்ட்டாக ஒப்படைத்துவிட்டு, வழக்கமான வங்கிப் பணியில் கரைந்து போனவரிடம் பேசியபோது…

நா தழுதழுக்க… கண்களை கண்ணீர் திரையிட பேச ஆரம்பித்தார். ‘‘எனது மகள் ஜனனி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாள். இறப்பதற்கு முன்பு அவள் சொன்ன வார்த்தை,  “இல்லாதவர்களுக்கு செய்” என்பதே. அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இதில் இல்லை. இதனை ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை’’ என்றவரை வற்புறுத்தி கேட்கவே, மேலே தொடர்ந்தார்…

‘‘என் பெயர் ஆயி என்கிற பூரணம். நான் பிறந்தது மதுரை ஒத்தக்கடை அருகே யானைமலை கொடிக்குளம். அது ஒரு சிறிய கிராமம். எனக்கு முன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள். நான்தான் வீட்டில் கடைசி. இதே பள்ளியில்தான் 5ம் வகுப்புவரை படித்தேன். 88ல் எனக்குத் திருமணம் நடந்தது. கணவர் கனரா வங்கியில் பணியாற்றி வந்தார். 89ல் எங்களுக்கு மகள் ஜனனி பிறந்தாள். மகிழ்ச்சியாகச் சென்ற எங்கள் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. என் மகள் பிறந்த இரண்டே ஆண்டுகளில் கணவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இது நடந்தது 91ல்.

பத்தாம் வகுப்புவரை நான் படித்திருந்ததால், கணவர் பணியாற்றிய கனரா வங்கியிலேயே கருணை அடிப்படையில் எனக்கும் வேலை கிடைத்தது. மகளை நன்றாக வளர்த்து பி.காம் வரை படிக்க வைத்தேன். அவளுக்கு ஆடிட்டர் ஆகும் விருப்பம் இருந்தது. ஆனால் நானோ திருமணம் செய்து வைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் இறந்துவிட்டாள்’’ என்றவாறு விசும்பியவர், தன்னை ஆசுவாசப்படுத்தி மேலே தொடர்ந்தார்.

‘‘என் பெண்ணின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறப்பதற்கு முன்பு சொத்துக்களை, படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். இவ்வளவு பெரிய சொத்தை விற்று என் மகள் பெயரில் டிரஸ்ட் தொடங்கி பிறருக்கு உதவி செய்வதெல்லாம் தனி ஒருத்தியாக என்னால் முடியாத காரியம் என்பதால், அழியாத சொத்து கல்வியே என சிந்தித்து, நான் படித்த அரசுப் பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்ற எழுதிக் கொடுத்துவிட முடிவு செய்தேன்.

இடத்தை பள்ளிக்கு தானமாக மாற்றிக் கொடுப்பதில் அரசு சார்ந்த நடைமுறைகள் பலவும் இருந்தது. உறவினர்களின் உதவியோடு ஒவ்வொன்றாக சரிசெய்து, முறைப்படி பத்திரவுப் பதிவும் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் பத்திரத்தை ஒப்படைத்தேன். இவ்வளவு பெரிய சொத்தை நீங்கள் பள்ளிக்கு தானமாகக் கொடுப்பதை நாங்கள் வெளியில் சொல்லாமல் இருப்பது எப்படி? எனக் கேட்டுவிட்டு, மாவட்ட கல்வி அலுவலர் இந்தச் செய்தியினை வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார்.

உயர் அதிகாரிகள் தலைமை அலுவலகத்திற்கு என்னை வரவழைத்து நேரில் பாராட்டினார்கள். அப்போது எம்.பி. வெங்கடேஷன் அவர்களும் அங்கு வந்து என் கரங்களைப் பற்றி தனது அன்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகே செய்தி ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. பிறகு என்னோடு வேலை செய்பவர்கள், முகம் தெரியாதவர்கள் எல்லாம் என்னை வாழ்த்தினார்கள். இந்த புகழும் பாராட்டும் என் மகள் ஜனனிக்கே சேரும்…’’ நா தழுதழுக்கிறார் பூரணம் அம்மாள்.

‘‘கிராமத்தில் எங்கள் குடும்பம் மிகப் பெரியது. என் அப்பா, பெரியப்பா, சித்தப்பா என அனைவருமாக சேர்ந்து 1952 களிலே பள்ளி கட்டுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது தடைபட்டுப்போனது. இன்று என் மகள் மூலமாக அது நடைபெறப் போகிறது என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் படித்த கொடிக்குளம் பள்ளிக்கூடத்திலும் என்னை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்கள். அங்குள்ள மழலைச் செல்வங்கள் ‘ஆச்சி ஆச்சி’ என என்னை அன்போடு அழைத்தபோது, அவர்களின் விழிகளில் என் மகளைப் பார்த்தேன். இவர்கள் எல்லாம் படித்து பெரிய பெரிய அதிகாரிகளாக மாறவேண்டும். அவர்கள் வழியாக நான் என் மகளை தரிசிக்க வேண்டும்’’ கண்ணீர் மல்க விடைபெற்றவரைத் தொடர்ந்து பேசியவர், இடத்தை தானமாகப் பெற்ற யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பூரணம்.
‘‘எங்களுடையது தமிழ்வழி பள்ளி.

அன்றாடம் கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகளே இங்கு பெரும்பாலும் படிக்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் ஒருமுறை மட்டுமே அரசு பேருந்து ஊருக்குள் வரும். மற்றபடி மினி பஸ் எப்போதாவது வந்து செல்லும். எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க, மெயின் ரோட்டிற்குச் சென்றுதான் மாணவர்கள் பேருந்து ஏற வேண்டும். பெரும்பாலும் மேலூர், மதுரை என அருகாமையில் உள்ள ஊர்களுக்கு பஸ் ஏறி தொலைதூரம் சென்றுதான் மாணவர்கள் உயர் கல்வி படிக்கிறார்கள்.

அதற்கு 2 கிலோமீட்டர் குழந்தைகள் தினமும் நடந்தே செல்ல வேண்டும். பெண் குழந்தைகள் 8ம் வகுப்புக்கு மேல் பேருந்து ஏறிச் சென்று படிக்க ஊரில் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. எனவே பள்ளி இடைநிற்றலும் உண்டு. உயர்நிலைப் பள்ளியாக மாற்றினால் நிச்சயம் மாணவர்கள் இங்கேயே பாதுகாப்பாக படிப்பைத் தொடர்வார்கள்.

பூரணம் அம்மாளின் பிறந்த ஊர் இதுதான். 5ம் வகுப்புவரை இதே பள்ளியில்தான் படித்துள்ளார். திருமணத்தில் அப்பா வீட்டு சீதனமாக கொடுத்த சொத்தைதான் இப்போது எங்கள் பள்ளிக்கு தானமாக கொடுத்திருக்கிறார். பள்ளிக்காக கொடுத்துள்ள இடம் ஊரின் நுழைவு வாயிலிலேயே இருக்கிறது. உயர்நிலை பள்ளியாக மாற்றத்தான் அந்த இடத்தை எங்கள் பள்ளிக்கு வழங்கியிருக்கிறார்.

அரசு அறிவிப்பிற்குப் பிறகே இது உயர் நிலைப் பள்ளியாக மாறும். கட்டிடம் கட்டிய பிறகு 6ல் இருந்து 10 வரை அவர் கொடுத்த இடத்தில் வகுப்புகளைத் தொடங்கலாம்.பூரணம் அம்மாள் மகளின் இறப்புக்கு பிறகு உடல் நிலையும், மனநிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தவர், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

வெளியில் சொல்லாமலே பல்வேறு பள்ளிகளுக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். பார்வை சவால் உடையவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வாங்கிக்கொடுத்து வருகிறார். எங்கள் பள்ளிக்கும் ஏற்கனவே குடிநீருக்கான போர்வெல், கழிப்பறை வசதி, மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம் வழங்குவது என உதவிகளை செய்திருக்கிறார்.

நிலத்தை பள்ளிக்கு தானமாகக் கொடுப்பது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “உங்கள் பள்ளிக்கு எனது இடத்தை தானமாக கொடுக்க இருக்கிறேன்” என்றார். அப்போது கொரோனா பரவல் நேரம். “இதற்கென சில அரசு நடைமுறைகள் இருக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மூலமாகத்தான் பத்திரம் பதிவாக வேண்டும் அவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு வாருங்கள்” என அறிவுறுத்தினேன்.

அவரும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி, அரசு நடைமுறைகளை எல்லாம் படிப்படியாகச் செய்து, ஜனவரி 5ல் பத்திரப் பதிவு அலுவலகம் மூலமாகவே இடம் பள்ளிக்கு தானமாக தரப்பட்டது. அப்போதுதான் எங்களுக்கே அவர் ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறார் எனத் தெரியவந்தது. நீங்களே வந்து மாணவர்கள் முன்புதான் இந்தப் பத்திரத்தைக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்தபோதும் வர மறுத்தவர், அழுத்தமான வேண்டுகோளுக்குப் பிறகே சம்மதித்தார். மாவட்ட கல்வி அலுவலர்களை வைத்து அவருக்கு சிறிய அளவில் மரியாதை ஒன்றையும் செய்தோம். அன்றைய தினம் மாணவர்களோடு கலந்துரையாடி ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார்’’ என்றவாறு விடை கொடுத்தார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post இல்லாதவர்களுக்கு செய்! appeared first on Dinakaran.

Tags : Kunkum Doshi - Aai Puranam Ammal ,Aai Puranam Ammal ,
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!