×

சிறுபான்மை நலத்துறை சார்பில் கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற வாய்ப்பு

சிவகங்கை, பிப்.9: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், கைவினை கலைஞர்கள் டாம்கோ மூலம் கடனுதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் என்ற கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற விண்ணப்பதாரர் 18வயது முதல் 60வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 4சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5சதவீத வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000க்கு மிகாமலும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறுபான்மை நலத்துறை சார்பில் கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Minority Welfare Department ,Sivagangai ,District Backward and ,TOMCO ,Sivagangai district, Tamil Nadu ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி