×

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் அண்ணாமலை மீதான வழக்கு ரத்து கோரிய மனு தள்ளுபடி: இரு சமுதாயத்தை பிளவுபடுத்தும் உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘‘பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு இதை எதிர்த்து அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அண்ணாமலையின் இந்த வெறுப்பு பேச்சு குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட வேண்டும். நூறு பேர் முன்னிலையில் பேசும் பேச்சுக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவிடுவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் பேசுவது உலகம் முழுவதும் சென்றுவிடும். ஹிட்லரின் பேச்சு இறுதியில் மக்கள் படுகொலையில் முடிந்தது என்பதை வரலாறு நமக்கு தெரிவித்துள்ளது. வகுப்பு வாதம் இரு சமூகத்தினருக்கு இடையே கலகத்தை ஏற்படுத்திவிடும்.

யூடியூப் சேனலுக்கு 44:25 நிமிடங்கள் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதில் தீபாவளி தொடர்பாக குறிப்பிட்ட பகுதியை கொண்ட 6:50 நிமிடங்களை எடுத்து அவரது கட்சியின் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த பேட்டியில் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது போல முன்னிறுத்தியதன் மூலம் இரு சமுதாயத்தை பிளவுபடுத்தும் உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதற்கான முகாந்திரம் உள்ளது. இந்திய காவல் பணியின் முன்னாள் அதிகாரியான அண்ணாமலை சட்டத்தை பற்றி தெரிந்திருப்பார்.

கட்சியின் மாநில தலைவராக மக்களிடம் செல்வாக்கு பெற்ற இவரது கருத்துக்கள் இந்து மதத்தினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அண்ணாமலையின் பேச்சு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது. எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு நிரந்தரமாக உள்ளதால், இதுபோன்ற பேச்சுகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டை போன்றது.தெளிவாக ஆராய்ந்த பிறகே, சேலம் மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.எனவே, வழக்கை ரத்து செய்ய முடியாது. அண்ணாமலை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

The post சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் அண்ணாமலை மீதான வழக்கு ரத்து கோரிய மனு தள்ளுபடி: இரு சமுதாயத்தை பிளவுபடுத்தும் உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Madras High Court ,Chennai ,Tamil Nadu ,BJP ,YouTube ,Diwali ,Chennai High Court ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...