×

பயோ மைனிங் முறையில் குப்பை பிரித்தெடுத்து பெருங்குடியில் 50 ஏக்கருக்கு அதிகமாக நிலம் மீட்டெடுப்பு: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பிப்.8: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-180, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2வது அவென்யூவில் சாலை மற்றும் நடைபாதை பணியை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். திருவான்மியூர் கடற்கரை சாலையில் நடந்து வரும் நடைபாதை பணி, கடற்கரையையும் பார்வையிட்டார். அப்போது, கடற்கரையில் கூடுதலாக குப்பை தொட்டிகள் வைத்திடவும், அதற்கான அறிவிப்பு பலகைகளை வைத்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அங்குள்ள வியாபாரிகளிடம் கடை முகப்பில் குப்பை தொட்டி வைக்கவும், குப்பையை பொதுவெளியில் போடாமல் குப்பை தொட்டியில் போடவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், வார்டு-184, மாநகராட்சி சாலையில் ரூ.10.8 கோடியில் நடந்து வரும் கான்கிரீட் சாலை பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்குள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணியையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பை பிரித்தெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

பிறகு ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தற்காலிகமாக 50 ஏக்கர் நிலப்பரப்பை விட்டுவிட்டு மற்ற இடங்களில் குப்பை கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடையே முறையாக குப்பையை தரம் பிரித்து வழங்குவது குறித்தும், குப்பையை குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்டவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் 62 லட்சம் மெட்ரிக் டன் குப்பையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 32 லட்சம் மெட்ரிக் டன் குப்பையும் உள்ளது. பெருங்குடியில் சுமார் 24 லட்சம் மெட்ரிக் டன் குப்பை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, 50 ஏக்கருக்கு மேல் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூரிலும் இதுபோன்ற பணிகள் மூலம் நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் சாதாரணமாக நினைக்கக்கூடிய குப்பை என்ற ஒன்று, ஒரு நாளைக்கு ஒரு நபரால் உருவாக்கக்கூடிய 700 கிராம் குப்பை என்பது சென்னையில் நாளொன்றுக்கு 6300 மெட்ரிக் டன் குப்பை உருவாகிறது. இந்த குப்பை தான் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு குப்பை மாற்று நிலையங்களுக்கு சென்று, பிறகு குப்பை கொட்டும் வளாகத்திற்கு வருகிறது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது நம் குப்பை என்பதையும், இதற்காக மாநகராட்சியில் பல்வேறு நிலையில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும்.

பொதுமக்கள் சாதாரண குப்பை என்று கருதும் நிலையில், குப்பையிலே பணியாற்றக்கூடிய கடமையில் பலர் உள்ளனர். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் குப்பை உருவாவதைக் குறைக்க முடியும், குப்பையை முறையாக தரம் பிரித்து கொடுக்க முடியும். குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும். இதை பொதுமக்கள் நினைத்தால் செய்ய முடியும். கோயில்கள் மற்றும் ஆலயங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க வேண்டும். அடுத்த 2 மற்றும் 3 ஆண்டுகளிலாவது குப்பை கொட்டும் வளாகங்களில் உள்ள குப்பை முழுவதுமாக அகற்றப்பட்டு, மிகவும் குறைவான அளவிலான குப்பை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு வரக்கூடிய நிலையை உருவாக்குவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பெரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, பயோ காஸ் தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்களை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புதல், பிற பொருட்களை கொண்டு பயன்படக்கூடிய பொருட்கள் தயாரித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் ஒத்துழைப்பு தந்தால் அனைத்திலும் வெற்றி
கடற்கரையில் ஆய்வின்போது 58 குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் பொதுமக்கள் குப்பையை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே சிதறி போட்டு விடுகின்றனர். அங்கு தூய்மைப் பணியாளர்கள் கடமையின் காரணமாக ஆங்காங்கு காணப்படும் குப்பையை சேகரித்து வருகின்றனர். அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையை போட்டால் பணி எளிதில் முடியும். பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான் அனைத்திலும் வெற்றி பெற முடியும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

The post பயோ மைனிங் முறையில் குப்பை பிரித்தெடுத்து பெருங்குடியில் 50 ஏக்கருக்கு அதிகமாக நிலம் மீட்டெடுப்பு: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Corporation Commissioner ,Radhakrishnan ,Chennai ,J. Radhakrishnan ,1st ,2nd Avenues ,Thiruvalluvar Nagar ,Ward-180 ,Chennai Corporation ,Adyar ,Zone ,Thiruvanmiyur beach ,Dinakaran ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...