×

நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி அத்துமீறல் இளம்பெண்ணிடம் நகை பணம் பறித்த வாலிபர் கைது: உடந்தையாக இருந்த அதிமுக பிரமுகர் உட்பட 2 பேர் சிக்கினர்

சென்னை: நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி, இளம் பெண்ணிடம் பணம், நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அதிமுக பிரமுகர் உட்பட 2 பேர் சிக்கியுள்ளனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவரை அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான முகமது யூனுஸ் (18) என்பவர் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இதில் யூனுசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டதால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அவரைவிட்டு இளம் பெண் பிரிந்து சென்றார்.

இந்நிலையில் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்து பணம் கேட்டு, யூனுஸ் மிரட்டி வந்துள்ளார். இதில் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துள்ளார்.
இதனையடுத்து, யூனுசின் தொல்லை நீங்கியது என்று நிம்மதியடைந்த அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை அறிந்த முகமது யூனுஸ், மீண்டும் அந்த இளம் பெண்ணை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும் எப்படியாவது அப்பெண்ணுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அவர் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக தனது நண்பர்களான கொருக்குப்பேட்டை ஆனந்தநாயகி நகர், குறுக்குத் தெருவைச் சேர்ந்த பப்லு என்ற ராமச்சந்திரன் (28) மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரின் உதவியை யூனுஸ் நாடியுள்ளார். இதில் ‘தீப்பந்தம்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்யும் பப்லு, அதிமுக 53வது வட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, 3 பேரும் சேர்ந்து மணமகன் குடும்பத்தாரிடம் புகைப்படங்களை காண்பித்து, இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து தட்டிக்கேட்ட அந்த இளம் பெண்ணை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யூனுஸ், பப்லு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், முகமது யூனுஸ், பப்லுவை புழல் சிறையிலும், 17 வயது சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். இதில் கைதான பப்லு, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் வசூலித்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அவரது காரை பறிமுதல் செய்து, மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் வசூலித்த இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி அத்துமீறல் இளம்பெண்ணிடம் நகை பணம் பறித்த வாலிபர் கைது: உடந்தையாக இருந்த அதிமுக பிரமுகர் உட்பட 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Netaji Nagar, 4th Street, Thandaiarpet ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...