×

முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார்; புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நிறைவு: மேயர் மகேஷ் தகவல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்காக புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. மிக விரைவில் இந்த குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று மேயர் மகேஷ் கூறினார். நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின், இந்த பணிகளை வேகமாக முடிக்க மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். ஆணையர் ஆனந்த்மோகனுடன் அவ்வப்போது ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.

அதன்படி முதலில் குலசேகரம் அருகே உள்ள புத்தன்அணையில் இருந்து 31.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிவடைந்தன. அதன் பின்னர் மாநகர பகுதிக்குள் 475 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்தன. இந்த 475 கி.மீ. தூரத்தில் இதுவரை சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதே போல் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிக்காக ஏற்கனவே உள்ள 12 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் தவிர, புதிதாக 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும், கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் செல்வதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டது.

அதன்படி இந்த பணிகள் முடிந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 23 குடிநீர் தொட்டிகளுக்கும் தண்ணீர் விடப்பட்டு பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனையும் திருப்திகரமாக உள்ளது. கடந்த வாரம் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் குறித்து மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த்மோகன் ஆகியோர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த்மோகன் ஆகியோர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்காக புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டனர்.

பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது : நாகர்கோவில் மாநகராட்சிக்கான புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த திட்டத்துக்காக புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் 23 குடிநீர் தொட்டிகளுக்கும் அனுப்பப்பட்டு, சோதனை திருப்திகரமாக முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்துக்காக சுமார் 72 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடக்கிறது. 60 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு, இதில் 30 ஆயிரம் வீடுகளுக்கு மேல் மீட்டர் பொருத்தும் பணியும் முடிவடைந்துள்ளது. எனவே புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன.

விரைவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். இதற்காக முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. தற்போதும் மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ஒரு சில வார்டுகளுக்கு 2, 3 நாட்களுக்கு ஒருமுறையும், ஒரு சில வார்டுகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதை சரி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார், மண்டல தலைவர் ஜவகர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆஷிக் அகமது, முருகன், மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசிலி, பணிகள் மேற்பார்வையாளர் ராஜா, கவுன்சிலர்கள் மேரி ஜெனட் விஜிலா, ராஜா, திமுக நிர்வாகிகள் எம்.ஜே. ராஜன், ஷேக் மீரான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

24 மணி நேரமும் குடிநீர்: ஆணையர் ஆனந்த்மோகன் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்த ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சி பகுதிகள் தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 1,2,3 மற்றும் 51,52, 53 ஆகிய 6 வார்டுகளாக உள்ளன. இந்த 6 வார்டுகளுக்கும் 24×7 திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.60 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இருந்தே இணைப்பு கொடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

The post முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார்; புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நிறைவு: மேயர் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mayor ,Mahesh ,Nagercoil ,Budhan Dam ,Nagercoil Municipal Corporation ,M. K. Stalin ,Nagercoil Corporation ,Budhan ,Dam ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...