×

சிறுகதை-தலைப் பொங்கலுக்கு பாட்டி தந்த பரிசு!

நன்றி குங்குமம் தோழி

உச்சி வெயில் மண்டையை பிளக்க பொடி நடையாக நடந்து வேகாத வெயிலில் அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்தான் ராஜேந்திரன். பழங்காலத்து கட்டிடம், மூணு கட்டு வீட்டு வாசலில் நுழைந்தான். வாசலில் துள்ளிக் குதித்து ராஜேந்திரன் இடுப்பைப் பற்றிக் கொண்டது வளர்ப்பு நாய் சுராஜ். அதற்காக கொண்டு வந்திருந்த பிஸ்கெட்டை போட்டு விட்டு .“ஜானகி, ஜானு ஜானு” எனக் குரல் கொடுத்தபடியே கூடத்திற்கு வந்து நின்றான்.

அவள் இருக்கும் சத்தமே தெரியவில்லை, அங்கிருந்து சமையல் கட்டுக்கு வந்தான். சமையல் கட்டு சப்தமில்லாமல் அமைதியாக இருந்தது. எங்க போயிருப்பாள் என்று புழக்கடை கதவு திறந்து கொண்டு வந்து பார்த்தான்.வேப்ப மரத்தடியில் துணி துவைக்கும் கல்லில் துணிகளைத் துவைத்து அலசி பக்கத்தில் போட்டு விட்டு அப்படியே கல்லின் மீது அமர்ந்து கொண்டு கொடுக்காப்புளி மரத்தில் குரங்குகள் செய்யும் சேட்டைகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘‘ஜானு ,ஏ ஜானு!” என்று அழைத்தான். அவளுக்கு கேட்கவில்லை. எனவே மெதுவாக நடந்து அவளின் தோளை தொட்டான்.திடுக்கிட்டு திரும்பியவள்,‘‘என்னங்க வந்துட்டீங்களா… போன காரியம் என்ன காயா? பழமா?” என ஆர்வத்துடன் கேட்டாள். தன் முகத்தில் வடிந்த வேர்வையை முந்தாணியால் துடைத்துக் கொண்டாள். அவளுடைய ஜாக்கெட் தெப்பமாக நனைந்து இருந்தது.

‘‘சரி வா இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிற என்ன பண்ண முடியும்” என்று கூறிக்கொண்டு மனைவியின் கையை ஆதரவாகப் பற்றினான். ‘‘இருங்க இந்த துணிகளை காயப் போட்டு வந்துடுறேன். உள்ள போய் செத்த ஒக்காருங்க நான் மோர் கலக்கிக் கொண்டு வரேன்” என்று கணவனை அனுப்பிவிட்டு துணிகளை கொடியில் காயப்போட போனாள். ‘‘அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான். ‘‘இப்படி உட்காரு” என்று ஊஞ்சலில் அவளை உட்கார வைத்தான்.

‘‘நல்லா இருக்கு… நீங்கதான் வேகாத வெயில்ல அலைந்து திரிந்து வந்திருக்கீங்க, நீங்க உட்காருங்க நான் போய் கொஞ்சம் மோர் கலக்கிக் கொண்டு வரேன்…” சமையற்கட்டு பக்கம் சென்று கணவனுக்கு குளிர்ந்த மோரை கொண்டு வந்து கொடுத்தாள். அதை பருகியவன் நிமிர்ந்து மனைவியை பார்த்தான். அந்த நேரத்தில் சித்தி வந்தாள். ‘‘என்னப்பா ராஜா, போன காரியம் என்ன ஆச்சு” மெல்லிய குரலில் கேட்டாள். பணத்துக்கு நீ கஷ்டப்பட்டு இருக்க அதுக்கு ஒரு வழி தெரிஞ்சுதா சொல்லு” என்று அவன் துயரத்தை பங்கு போட்டுக் கொள்ள துடித்தாள் சித்தி.
‘‘கேட்கிற இடத்தில எல்லாம் கைய தான் விரிக்கிறாங்க… என்ன பண்ண சித்தி” அவரின் முகம் சோர்ந்தது.

‘‘உனக்கு நல்லபடியா பணம் கிடைக்கும் கவலைப்படாதே…” ‘‘இந்த திருநெல்வேலி ஜில்லாவுல உனக்குன்னு ஒரு கடையை போட்டுக்கிட்டு இருட்டுக்கடை அல்வாக்கு சமமா நீயும் பக்கத்திலேயே டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்து ஜெயிச்சுட்டுதானே இருக்கிற. நான் தொழுவத்துல இருக்குற பசுக்களுக்கு எல்லாம் கொஞ்சம் தீனியை போட்டுட்டு வரேன்’’ என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் . அவளுக்கு புள்ள குட்டி யாருமில்லை என்பதனால் ராஜேந்திரனுடன் வந்து சேர்ந்து இருட்டு கடை அல்வா துவங்குவதற்கு முன்பாக இருந்து அவனிடத்தில் கூட மாட ஒத்தாசைக்கு இருந்ததனால் அவள் மீது கொஞ்சம் கரிசனம். சித்தி என்ற முறையோடு அழைத்தான்.

உறவில்லை என்றாலும் அன்பால் இணைந்த உள்ளங்கள். ‘‘ஏங்க நீங்க நமக்கு தெரிஞ்ச அந்த மளிகை கடை அண்ணா கிட்ட கேட்டீங்களா?’’ ‘‘கேட்காம இருப்பேனா ஜானு…” ‘‘கேட்டேன். என்னடா ராஜா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து இருக்க கூடாதா… சீட்டு பணம் அப்படியே பத்து லட்சத்தை இப்பதான் எடுத்து கொடுத்தேன். எதுவுமே இல்லையே… புரட்டவும் முடியாதுப்பா மிச்சம் மீதிய சரக்குக்குகட்டிட்டேனே” கையை பிசைந்தார்.

‘‘பரவாயில்லை அண்ணே! ரெண்டு நாள்ல என்னுடைய பணம் வந்து விடும். ஆனால் அவசரத்துக்கு மகளுக்கு சீர் செய்யணும் அதுக்காகதான்…’’ குறைப்பட்ட மனசோடு கூறினான்.
‘‘ராஜா உன்னுடைய கஷ்டத்தை அம்பாள் எந்த ரூபத்திலயாவது தீர்த்து வைப்பாள். தைரியத்தோடு வீட்டுக்கு போப்பா” என்று கடவுளே அருள் வாக்கு தந்தது போல அவனை அனுப்பி வைத்தார். ‘‘ஜானு உண்மையிலேயே அவர் வாக்கு என் மனசுல ஏதோ ஒரு சக்தியை கொடுத்த மாதிரி இருந்ததுப்பா…’’‘‘இத பாருங்க நம்பிக்கை யானை பலம் தரும். மனம் தளராதீங்க நிச்சயமா நல்லதே நடக்கும்’’ என்று ஆறுதல் அளித்தாள்.

‘‘ஜானகி, அஞ்சு பெண் குழந்தைகளை பெத்து ஒவ்வொன்னையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவங்கள கட்டிக் கொடுத்த விஷயம் இருக்கு பாரு பெரிய புண்ணியம்… பெரிய வேலை… கடைக்குட்டி ரமாக்கு நாலு குட்டிகளை விட நல்ல இடத்துலதான் கல்யாணம் பண்ணி வெச்சோம். தீபாவளிக்கு செய்ய வேண்டிய சீர் நம்மால அந்த சந்தர்ப்பத்தில் கொடுக்க முடியல… பொங்கலுக்கு செய்றோம்னு சொன்னோம். இப்பவும் நம்ம வாய்தா கேட்க முடியுமா? கேட்டா நல்லாதான் இருக்குமா?”

‘‘நமக்கு மேல மேல வியாபாரத்துல கொஞ்சம் சரிவு ஏற்பட்டது. அதனாலதானே நாம கொஞ்சம் நேரம் கேட்டோம்… இதுல தப்பு ஒன்னும் இல்லைங்க. நீங்க கவலைப்படாதீங்க. அந்த 5 கிலோ வெள்ளியையும் அஞ்சு சவரனையும் நாம எப்படியாவது போட்டு விடலாம். இருங்க கவலைப்படாதீங்க… வழி கிடைக்கும். நிம்மதிய இழக்காதீங்க… மனம் தளராதீங்க…’’ என்று வருத்தத்தை பகிர்ந்து கொண்டாள்ஜானு…

அந்த சமயத்தில் ஜானகியின் செல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள். ‘‘ஹலோ ரமா எப்படிம்மா இருக்க?’’ என்று மகளிடம் கேட்டாள். ‘‘அம்மா… நீங்க சீர் செய்து விடுவீங்களா அம்மா? குத்துவிளக்கு பெருசா இருக்கணுமாம், சும்மா சுண்டு விரல் மாதிரி எல்லாம் குத்து விளக்கு கொண்டு வந்து வைக்கப் போறாங்க என்று ஜாடமாடையா பேசுறாங்க… அம்மா நேத்து எங்க மாமியாருக்கு தூரத்து உறவு பொம்பள ஒருத்தர் வந்திருந்தாங்க அவங்ககிட்ட சொல்றாங்க நம்ம வீட்டுப் பசங்களுக்கு எல்லாம் இரண்டு முழம், மூணு முழம் அளவுக்கு குத்து விளக்கு செய்து வச்சோம். இந்த காலத்துல யார் கொண்டு வந்து வைக்கிறாங்க என்று நக்கலா என்ன பார்த்தாங்க அம்மா…’’ ‘‘கவலைப்படாதடா அவங்க வீட்டு பொண்ணுகளுக்கு அவங்க செய்ததை பெருமையா சொல்லிக்கிறாங்க… அதுக்காக நாம கஷ்டப்படலாமா? ரமா நம்மால முடிஞ்சது நாம செய்வோம்…’’
‘‘அப்பாக்கு, என்னால ரொம்ப கஷ்டம் இல்லம்மா” என்று அழத் தொடங்கினாள் ரமா.

‘‘அடி அசடே! இதுக்கெல்லாம் அழுவாங்களா யாராச்சும்? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்…’’
‘‘உங்க மாப்பிள்ளை கூட சொன்னாருமா வேணும்னா அவர் பணம் தராரு…’’ ‘‘அதெல்லாம் ஒன்னும் வேணா ரமா…’’ ‘‘அப்பா, சமாளிப்பாரு மனச லேசா வச்சுக்கோ புதுசா கல்யாணமானவ நாளு எடத்துக்கு போ சந்தோஷமா இரு இதெல்லாம் எங்க பிரச்னைடா நாங்க பாத்துக்க மாட்டோமா என்ன?’’ என்று அம்மா ஆறுதலாக மகளுக்கு நிம்மதியை கொடுத்துவிட்டு கணவனை திரும்பி பார்த்தாள்.

அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, சென்ற இடங்களில் ஒவ்வொரு மாதிரி காரணங்கள் கூறினர். என்ன செய்வதென்றே தெரியாமல் கிறுக்கு பிடிச்ச மனுஷன் போல தலைய பிச்சிகிட்டு அம்மாவின் அறையில் போய் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். ‘‘அம்மா! உன் பேத்திக்கு ஒரு வழி சொல்லுமா… நான் என்னம்மா செய்வேன்’’ என்று மனதுக்குள்ளே புலம்பி அண்ணாந்து விட்டத்தை பார்த்தார்.

‘‘என்னங்க எதுக்காக இப்படி இடிஞ்சு உட்கார்றீங்க… கடவுள் ஒருத்தன் இருந்தால் தக்க சமயத்துல நமக்கு பதில் கொடுப்பார். நீங்க ஏங்க இப்படி எல்லாம் கஷ்டப்படுறீங்க…’’ ‘‘நமக்கு கூரை எல்லாம் பிடிச்சிட்டு கொடுக்க வேண்டாம். சும்மா அள்ளி கொடுக்குற தெய்வம் கிள்ளி கொடுத்தா கூட போதுமே” என்றாள். அடுத்தடுத்து மகள்கள் போன் செய்தனர்.

‘‘அப்பா, உங்களுக்கு ஏதாவது செய்யட்டுமா?’’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசினார்கள். அவர்கள் எல்லோரிடத்திலும் பொங்கலுக்கு எல்லாரும் வந்துருங்க… ஆயிரம் தான் நமக்கு கஷ்டங்கள் இருந்தாலும் நம்மளுடைய குழந்தைகள், மருமகன்கள், பேரன் பேத்திகள் புடை சூழ அப்பொழுது கொண்டாடப்படும் தலைப் பொங்கல் உங்களுக்கு மிக மிக நன்றாக இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறை கொண்டாடப்படும் விழாதான் தலைப் பொங்கல்.

உங்கள் அறுபதாம் எழுபதாம் திருமண நாளிலும் எங்க வீட்டுல நடந்திருக்கு… எங்க அப்பா, அம்மா செய்தாங்க என்று பெருமையாக சொல்லிச் சொல்லி உங்களுடைய குழந்தைகளும் வருங்காலத்தில் சொல்லணும் என்று மகள்களுக்கு ஆறுதல் அளித்தான். அவன் படுக்கையில் இருந்தபடியே பரணை பார்த்தான். அழுக்கேறிய மூன்று பெட்டிகள்.ஒரு நாளும் அந்த பெட்டிகளை அவன் திறந்து பார்த்ததும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் அம்மா அடிக்கடி சொல்லுவார்.

மனுஷன் வாழற காலத்தை விட அவன் மறைந்த பிறகு தான் மதிப்பே அதிகம். அதுதான் சிறப்பு. ஒரு மனுஷன் வாழ வேண்டிய காலத்தை விட அவன் போன பிறகும் நாலு பேருக்கு நல்லது செய்யணும். அதை செய்திட்டா உலகமே நம்மை புகழும். அந்த புகழுக்கு நம் சந்ததியருக்கு நான் செய்யக்கூடிய ஒன்று… அம்மாவின் குரல் காதுகளில் ஒலித்தது ‘மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்று அடிக்கடி அம்மா கூறியிருக்கிறார்.

சினிமாவிலும் ஜோக்காக எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் என்று காட்டியதை அடிக்கடி போட்டுப் பார்த்து ரசித்ததும் உண்டு. தன்னுடைய ஐந்து பேத்திகளை உயிரினும் மேலாக ஆசையாக கடைசி வரையிலும் வைத்து இருந்தாள். ‘‘அம்மா அந்தப் பெட்டியில் என்னதான் வைத்திருப்பார்களோ திறந்து பாத்திருக்கியா ஜானு?’’ ‘‘எனக்கு இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு உங்க அம்மா பெட்டியை திறந்து பார்க்கிறதுதானே எனக்கு வேலை…” அலுத்துக் கொண்டாள். ‘‘இல்லம்மா, அந்தப் பெட்டிக்குள்ள என்ன வெச்சிருப்பாங்கன்னு எனக்கே தெரியாது. அம்மா போய் ஒரு அஞ்சு வருஷத்துக்கு மேலே இருக்கும்…’’‘‘வேலை அதிகமா இருக்குங்க… சும்மா இருங்க’’ என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்த்தாள்.

‘‘அப்படி இல்ல ஜானு… பெட்டிகளை வரிசையாக திறக்கிறோம். அந்தப் பெட்டிகளில் ஒன்றை திறக்கும் பொழுது மேலே அம்மாவின் பழங்கால சினிமா பாட்டு புத்தகங்கள், பழைய உடைகள், அந்த காலத்து எம்பிராய்டிங் புக் ஒர்க் இதுதான் இருக்கிறது. அமுதசுரபி, கல்கியில் வந்த தொடர்கதைகள், சின்னச் சின்ன பொருட்கள் இப்படியே ஒவ்வொரு பெட்டியிலும் அப்பாவினுடைய அப்பாவுடைய முக்கியமானவைகள்.. இதையா அம்மா இப்படி பூதம் அடை காக்குற மாதிரி பாதுகாத்தாங்க…’’ ‘‘ஜானு இங்க வந்து பாரு அம்மா வினுடைய அம்மா புடவைகள்…” என்று கத்தினான்.

அங்கே உள்ளே நுழைந்தவள், கணவன் காட்டிய அந்தப் பெட்டிகளில் தவழும் கிருஷ்ணன் கரை கட்டிய தொட்டிக்கரை புடவைகள்… அவள் அப்படியே வியப்படைந்தாள். ‘‘ஜானு… அம்மா கிழிந்த புடவைகளை எப்படி பாதுகாத்து வச்சிருக்காங்க பாரு…”‘‘புரியாம பேசாதீங்க…”‘‘என்னடி சொல்ற…”‘‘அத்தனையும் விலை மதிப்புள்ள புடவைங்க…”‘‘கிழிஞ்சி போன புடவைங்க எப்படி விலை மதிப்புள்ளதாஆகும்… லூசா நீ…”‘‘ஆமாங்க… ஒவ்வொரு புடவையும் வெள்ளி ஜரிகையும் தங்கமும் கலந்த தொட்டிக்கரை புடவைங்க… இது மூன்று லட்சத்துக்கு மதிப்பு இருக்கும்… ”‘‘அப்படியா’’ என்று எடுத்துப் பார்க்க…

ஐந்து புடவைகள் இருந்தது. அவசரமாக மற்றொரு பெட்டியை திறந்து பார்த்தான். உள்ளே அந்தக் காலத்துல அம்மா போட்டிருந்த நகைகள்… அவங்களுடைய தாலிக்கொடி. அதில் முக்கியமான உருவுகள் எல்லாம் இருந்தன. அதை எல்லாம் அம்மா ஒருநாளும் அணிந்ததை பார்த்ததே இல்லை. அப்பா இருக்கும்போது அணிந்த தாலிக்கொடி… இவ்வளவு நகைகள் இருந்தும், இவ்வளவு வசதி இருந்தும் அம்மா ஏன் ஒரு நாளும் இதெல்லாம் வச்சிருக்கேன் என்று சொல்லவே இல்லையே… அப்படியே பார்த்தான் ஒரே ஒரு துண்டு காகிதத்தில் ஒரு கடிதம் இருந்தது…

‘‘கண்ணா… நான் இருக்கும் போது இந்தப் பெட்டியை நீ தொட மாட்டேன்னு தெரியும். ஆனா, நான் போன பிறகு இந்தப் பெட்டியை தொறந்தா என் பேத்திகளுக்கு நான் வச்சுட்டு போற மிகப்பெரிய செல்வம் இதுதான்… உன்னுடைய மனைவி ஜானகி கிட்ட கொடுத்து இதை அஞ்சு பிள்ளைகளுக்கும் சமமா கொடுத்து விடு…நான் ஒத்தப் பிள்ளை பெத்தேன். நீ அஞ்சு பொண்ணு அஞ்சு மருமகனும் நல்லா வரணும்… இந்த அம்மாவினுடைய ஆசை பேத்திகளுக்கு பாட்டியின் சீர்’’ என்று எழுதி இருந்தார். அதை படித்ததும் அவன் கண்கள் குளமாக நிறைந்தது. கண் கலங்கி அருவியாக கொட்டியது.

அப்படியே ஸ்தம்பித்து நின்றான். ரமா போன் செய்தாள்.‘‘ரமா! உன் தலைப் பொங்கல் ஜாம் ஜாம் என்று கொண்டாடலாம்…”‘‘எப்படிப்பா? பணம் கிடைச்சிருச்சா? யார் கொடுத்தாங்க?’’ அவசரமாக கேள்விகளை அடுக்கினாள். ‘‘உங்க பாட்டி வச்சிட்டு போய் இருக்கா… எல்லா மகளுக்கும் நடந்த நிகழ்வுகளை கூறிக் கொண்டே இருந்தார். அது மட்டும் இல்ல உங்க பாட்டி அதை எல்லோருக்கும் சமமா கொடுக்க சொல்லி இருக்காங்க…’’ மகிழ்ச்சி அவள் கண்களில் கூத்தாடியது.அம்மா தெய்வமானவள். நம் பெற்றோரை நாம் வணங்கினோம் என்றால் நிச்சயமாக எந்த ரூபத்திலாவது நம்மை காப்பாற்றி விடுவார்கள்… தலைப் பொங்கலை குடும்பம் கோலாகலமாக கொண்டாடியது.

தொகுப்பு: நீலம்மூன்

The post சிறுகதை-தலைப் பொங்கலுக்கு பாட்டி தந்த பரிசு! appeared first on Dinakaran.

Tags : Pongal ,Uchi Veil Rajendran ,Rajendran ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா