×

தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் 15 ஊராட்சிகளில் ரூ.3,585 கோடியில் குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணி: அதிகாரிகள் தகவல்


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் 15 ஊராட்சிகளில் ரூ.3,585 கோடி செலவில் குடிநீர், மழைநீர் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் அரசு அனுமதியுடன் விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 70 வார்டுகளில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில், தாம்பரம் பகுதிக்கு பாலாறு குடிநீர் திட்டம் நிரந்தரமான பயன்பாட்டில் உள்ளது. ஆனால் சிட்லபாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் மற்றும் மெட்ரோ குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாநகராட்சியின் மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தனியாக குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருவதால், அவற்றை பராமரிப்பது சிரமமாக இருப்பதுடன் அதற்கான செலவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியை சுற்றியுள்ள முடிச்சூர், திருவஞ்சேரி, அகரம்தென், மதுரபாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், மூவரசம்பட்டு, வேங்கைவாசல், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெரும்பாக்கம், பொழிச்சலுார், திரிசூலம், கவுல்பஜார் ஆகிய 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

எனவே, தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதனுடன் இணைக்கப்பட உள்ள 15 ஊராட்சிகளையும் சேர்த்து எதிர்கால திட்டமாக ஒருங்கிணைந்த குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைகள் நடந்து குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யும் பணிகள் துவங்கி முடிக்கப்பட்டு, ரூ.1,575 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம், ரூ.2,010 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் ரூ.3,585 கோடி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி மற்றும் நிதியும் கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், அடுத்த கட்டமாக மழைநீர் கால்வாய்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த அறிக்கை தயார் செய்யும் பணிகள் விரைவில் முடிவடைந்தவுடன் அதுவும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசு அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன் அதற்கான பணிகளும் துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

* நிதி ஒதுக்கியதும் பணிகள் தொடங்கும்
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் பகுதிக்கு மட்டும்தான் பாலாறு குடிநீர் கிடைக்கிறது. இதில் பல்லாவரம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் மற்றும் மெட்ரோ குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் கிடைக்கிறது. மீதமுள்ள செம்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அங்குள்ள நீர்நிலைகளில் இருந்து தான் தண்ணீர் கிடைக்கிறது.

எனவே, தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதனுடன் இணைக்கப்பட உள்ள 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த, நிதிநிலையில் அரசு சார்பில் இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில் பணிகள் துவங்கப்படும்” என்றார்.

The post தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் 15 ஊராட்சிகளில் ரூ.3,585 கோடியில் குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணி: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Pallavaram ,Anakaputtur ,Pammal ,Sembakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...