×

பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் புத்தகம் வெளியிட ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை : ஊழல் வழக்கில் சிக்கிய பதிவாளரின் சுற்றறிக்கையால் சர்ச்சை

சேலம்: சேலம்-பெங்களூரு சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் முதல் கொள்முதல் வரை பல்வேறு விவகாரங்கள் சர்ச்சை கிளப்பியுள்ளது. சமீபத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். மேலும், பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் மீது, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பதிவாளர் தங்கவேல் தலைமறைவானார். இந்த சூழலில், பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஆதரவாக இருக்கும்படி துறை தலைவர்களை பகிரங்கமாக மிரட்டினார். இந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், பதிவாளர் தங்கவேல் மீண்டும் பல்கலைக்கழக பக்கம் தலை காட்டினார். இதற்கிடையே, உள்ளாட்சி தணிக்கை குழுவில் நடந்த 9 நாள் ஆய்வில் ரூ.6 கோடி முறைகேடு செய்தது அம்பமானது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார். அதில், ‘பெரியார் பல்கலைக்கழக சாசன விதிகளில் குறிப்பிட்டுள்ள, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் புத்தகம் வெளியிடுதல், சமூக ஊடகங்களில் பங்குபெறும் போது முன்அனுமதி பெற வேண்டும் என்ற நடத்தை விதிகளை தெரிவித்துள்ளார். மேலும், பேராசிரியர்கள் புத்தகங்கள் ஏதேனும் வெளியிட்டிருப்பின், அதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? இல்லையா? இல்லையெனில் ஏன் பெறப்படவில்லை என்ற விளக்கம், புத்தகங்களின் எண்ணிக்கை, தலைப்பு, வெளியீட்டாளர் முகவரி, காப்புரிமை விவரம், புத்தக வெளியீட்டின் வழியாக பெறப்பட்ட பணப்பலன்கள் ஆகிய விவரங்களை, வரும் 20ம் தேதிக்குள் வழங்க, துறைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்தர உத்தரவாத மையத்தின் தேவைக்காக இதனை வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

 

The post பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் புத்தகம் வெளியிட ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை : ஊழல் வழக்கில் சிக்கிய பதிவாளரின் சுற்றறிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem-Bangalore ,Vice ,Jaganathan ,Booter Foundation ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...