×

ஓட்டல் திரவக்கழிவுகள் ரோட்டில் தேங்கி துர்நாற்றத்தின் பிடியில் வேலூர் ஜிபிஎச் சாலை

*நோயாளிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி

வேலூர் : ஓட்டல் திரவக்கழிவுகளை இணைப்புச்சாலையில் விட்டுள்ளதால் வேலூர் ஜிபிஎச் சாலை மற்றும் பில்டர்பெட் சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், நோயாளிகள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை சாலையையும், தெற்கு காவல் நிலையம் அமைந்துள்ள பில்டர்பெட் சாலையையும் இணைக்கும் இணைப்புச்சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்கள், அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் 24 மணி நேரமும் நடமாடும் சாலையாகவே விளங்கி வந்தது. அதோடு வாகன ஓட்டிகளும் இந்த இணைப்பு சாலை வழியாக சென்று தெற்கு காவல் நிலையம் சிக்னலில் அண்ணா சாலையை கடந்து செல்வர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த இணைப்புச்சாலை தற்போது ஓட்டல், வர்த்தக வளாகங்களின் திரவக்கழிவுகளுடன், அங்கு வீசப்படும் திடக்கழிவுகளும் கலந்து தேங்கி நிற்கிறது. மேலும் அங்கேயே இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலமும் நடந்தேறி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றத்துடன், ஈக்களும், கொசுக்களும் ஜிபிஎச் சாலை முழுவதும் பரவி பொதுமக்களையும், மருத்துவமனை வரும் நோயாளிகளையும் வேதனைக்கு ஆளாக்கும் நிலைக்கு தள்ளியுள்ளன. மேலும் ஜிபிஎச் சாலையில் இணைப்புச்சாலையில் உள்ள வியாபாரிகள், அவர்களின் கடைகளுக்கு வரும் பொதுமக்களும் ஈக்களுக்கும், கொசுக்களுக்கும், வீசும் கடும் துர்நாற்றத்துக்கும் அஞ்சி ஓடும் நிலை நிலவுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தொடர்ந்து நேரிலும், போன் மூலமும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘மிக முக்கியமான தாலுகா அந்தஸ்திலான மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ள இந்த சாலையை ஒட்டியுள்ள இந்த இணைப்புச்சாலை மூலம் அண்ணா சாலையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் அண்ணா சாலைக்கு செல்ல முடியும்.

தற்போது இந்த இணைப்புச்சாலை திரவக்கழிவுகள் தேங்கி நிற்கும் சாலையாக மாறியிருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் அண்ணா சாலையில் எதிர்புறமாக போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மேலும் புதிய நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலையும், அதை சார்ந்துள்ள வியாபாரிகள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பல தடவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேரிலும், மொபைல் போன் மூலமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு ஜிபிஎச் சாலை மற்றும் பில்டர்பெட் சாலை இடையே உள்ள இணைப்புச்சாலையில் உள்ள திரவக்கழிவுகளை அகற்றுவதுடன், அந்த இணைப்புச்சாலையில் சம்பந்தப்பட்ட ஓட்டல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திரவக்கழிவுகளை விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இணைப்புச்சாலையில் உள்ள கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.
சாலையில் மின்விளக்குகளை அமைப்பதுடன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓட்டல் திரவக்கழிவுகள் ரோட்டில் தேங்கி துர்நாற்றத்தின் பிடியில் வேலூர் ஜிபிஎச் சாலை appeared first on Dinakaran.

Tags : Vellore GPH Road ,Vellore ,Bilderbed Road ,road ,Dinakaran ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி