×

சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரி கார் ஏற்றி கொலை?

*நிற்காமல் சென்ற காரை தேடும் போலீசார்

சேலம் : சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். திட்டமிட்டு வெள்ளி வியாபாரியை கார் ஏற்றி கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(47). இவரது மனைவி சொர்ணலதா(40). வெள்ளி வியாபாரியான சங்கர், கடந்த 2ம் தேதி காலை வீட்டில் இருந்து பால் வாங்க அச்சிராமன் தெரு வழியாக கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கருப்பு நிற கார் சங்கர் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இதில் சங்கர் தூக்கி வீசப்பட்டு தலை, கை, காலில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த சங்கரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்போது, விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் சங்கரை திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளது போன்று வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், விசாரணையை துரிதப்படுத்தினர். வேகமாக வந்த கார் சங்கர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதும், காரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததும் விசாரணையில் தெரிந்தது.

மேலும், இந்த கார் 2ம் தேதி அதிகாலை செவ்வாய்பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியில் நின்று இருந்ததும், சங்கர் வீட்டைவிட்டு வெளியே வந்ததை யாரோ ஒருவர் கார் டிரைவருக்கு தெரிவித்து பின்னர் அந்த கார் அங்கிருந்து வேகமாக வந்து சங்கர் மீது மோதி விட்டு நிற்கமால் சென்றதும் தெரிந்தது.

தொழில் போட்டியால் சங்கர் மீது காரை ஏற்றி கொன்றார்களா? அல்லது சொத்துக்காக உறவினர்கள் யாராவது காரை ஏற்றி கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நம்பர் பிளேட் இல்லாமல் சங்கர் மீது மோதிய காரை போலீசார் தேடி வருகின்றனர். காரையும், கார் டிரைவரையும் பிடித்தால்தான் வெள்ளி வியாபாரி சங்கர், கார் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்பது தெரிய வரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

The post சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி வியாபாரி கார் ஏற்றி கொலை? appeared first on Dinakaran.

Tags : Salem Chevwaipetai ,Salem ,Salem Sewwaipettai ,Dinakaran ,
× RELATED சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப்...