×

தேர்தலில் வெற்றி பெற ராமரை அரசியல் கருவியாக பயன்படுத்த வேண்டாம்: மக்களவையில் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பேச்சு

புதுடெல்லி: தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராமரை பாஜ அரசியல் கருவியாகக் கருதக் கூடாது என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பொதுத் தேர்தல்கள் நெருங்கிவிட்டதால் நீங்கள் ராமருக்குப் பின்னால் தஞ்சம் அடைந்து விட்டீர்கள். நாங்கள் அனைவரும் ராமரை நம்புகிறோம். அவரை உங்கள் காப்புரிமையாக நீங்கள் மாற்ற வேண்டாம். அவரை தேர்தல் கருவியாக மாற்றாதீர்கள். ராமர் அனைவருக்கும் கடவுளாக இருக்கட்டும். 2014 பொதுத்தேர்தலில் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். தேர்தலுக்குப் பிறகு, அந்த வாக்குறுதி தேர்தல் ஸ்டண்ட் என்று கூறி விட்டனர். 2019 தேர்தல் வந்தபோது, ​​புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் வான்வழித் தாக்குதலை இந்தியா நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இருப்பினும், பாலகோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல் தொடர்பான உண்மை இன்னும் அரசால் பகிரப்படவில்லை. பாலகோட்டில் முக்கியத்துவம் வாய்ந்த எந்த இலக்கையும் இந்தியா தாக்கவில்லை என்று பல்வேறு அமைப்புகள் கூறி வருகின்றன. ஜனாதிபதி உரையில் இந்தியா-சீனா எல்லையில் பாதுகாப்பு பிரச்னை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் லடாக்கில் ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000 சதுர கிமீ நிலம் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனக் கொள்கையில் மோடி அரசு பலமுறை தோல்வியடைந்துள்ளது . இன்று மாலத்தீவில் என்ன நடக்கிறது. ‘இந்தியா அவுட்’ கோஷத்தின் பேரில் அந்த நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் எப்போதும் பாதுகாப்பு விஷயங்களில் அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியாக, பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளை முன்னிலைப்படுத்துவது எங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

DontuseRam-politicaltool-winelections-AdirranjanChowdhury-LokSabha

The post தேர்தலில் வெற்றி பெற ராமரை அரசியல் கருவியாக பயன்படுத்த வேண்டாம்: மக்களவையில் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ram ,Adirranjan Chowdhury ,Lok Sabha ,New Delhi ,Congress ,Adhir Ranjan Chowdhury ,BJP ,President ,Rama ,
× RELATED ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி