×

வேளாண் கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் கடன் வசதி பெறும் புதிய திட்டத்தை வெளியிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: பயிர் அறுவடைக்குப் பின்னர், விளைபொருட்களை காய வைத்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது ஒரு கடன் உதவி திட்டமாகும். 2020-21 இல் துவங்கப்பட்ட இத்திட்டமானது 2032-33 வரை செயல்பாட்டில் இருக்கும்.

* திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

வட்டி சலுகை :

அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3% வட்டி குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகின்றது. கடன் தவணைத் தொகையை திருப்பி செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டுகள் உட்பட, அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்குள் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ரூபாய் இரண்டு கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசு மானிய திட்டங்களை வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் அதிக பயன்களை பெறலாம்.

திட்ட பயனாளிகள்:

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), சுய உதவிக் குழுக்கள் (SHGs), விவசாயக் குழுக்கள், பெண் தொழில் முனைவோர்கள், விருப்பமுள்ள கிராமப்புற இளைஞர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள், புதிதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள் (Start Ups), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS), சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs), கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பல்வகை கூட்டுறவு சங்கங்கள், மத்திய / மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள், வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுக்கள் (APMCs), தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

* திட்டக் கூறுகள்:

அறுவடைப் பின் மேலாண்மைக்கான கட்டமைப்பு வசதிகள்:

மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள் (Godowns), சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள் (Pack houses), தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள் (Cold storages), முதன்மை பதப்படுத்தும் மையங்கள் (Primary Processing Centres), பழுக்க வைக்கும் அறைகள் (Ripening chambers) போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவான வேளாண் கட்டமைப்பு வசதிகள்:

இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள் போன்ற இனங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.agriinfra.dac.gov.in இணையதளத்தினை அணுகலாம்.மேலும், விவரங்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) மற்றும் மாவட்ட தொழில் மையங்களையும் தொடர்பு கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ளுமாறு மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

The post வேளாண் கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் கடன் வசதி பெறும் புதிய திட்டத்தை வெளியிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,Agricultural Structural Fund ,AIF ,
× RELATED சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக...