×

பெண்களை தாக்கும் தைராய்டு

நன்றி குங்குமம் தோழி

பெண்களில், பிட்யூட்டரி சுரப்பியின் மேற்பார்வையில் தைராய்டு சுரப்பியால் டி4 மற்றும் டி 3 ஹார்மோன்கள் உருவாக்கப்படாமல் இருப்பது இந்த நோயின் எழுச்சிக்கு வழிவகுக்கிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பிரச்னைகள் இரண்டு விதமான தைராய்டு நோயினை ஏற்படுத்தும். ஒன்று ஹைப்போ தைராய்டிசம். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் சோர்வு, எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை ஏற்படும். ஹைப்பர் தைராய்டிசம், அதிக எடை இழப்பு, விரைவான இதயத் துடிப்பு, பதட்டம், கழுத்து வீக்கம் மற்றும் பசி போன்ற பிரச்னைக்கு வழிவகுக்கும். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இரண்டில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள்தைராய்டு, பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருக்கும் சுரப்பி. இது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது. பெண்களில் தைராய்டு நோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். T3 மற்றும் T4 உடன், தைராய்டு கால்சிட்டோனின் உற்பத்தி செய்கிறது. இது ரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் செல்கள் மற்றும் உறுப்புகள் ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றும் விகிதத்தையும் அவை பயன்படுத்தும் ஆக்ஸிஜன் செல்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகின்றன.

பெண்களில் தைராய்டு பாதிப்புகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹார்மோன் அளவுகளில் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் பருவமடையும் போதும் அல்லது அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதன் ஆற்றலைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். பெண்களுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்ப காலத்தில், தைராய்டு நோயின் அறிகுறிகள் இருப்பின் அவை கருவை பாதிக்கும் மற்றும் கருச்சிதைவுகள், குறைப்பிரசவம், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான ரத்தப்போக்கினை ஏற்படுத்தலாம்.

தைராய்டு நோய்க்கான காரணங்கள்

ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகம். ஏறக்குறைய 8 பெண்களில் 1 நபர் தைராய்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு பிரச்னைகள் எந்த நேரத்திலும் நிகழலாம். ஆனால் மாதவிடாய் காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு பெண்களின் ஹார்மோன் அளவுகள் மாறும்போது இதன் பாதிப்பு ஏற்படும். சில பெண்கள் தைராய்டு கோளாறுகளின் அறிகுறிகளை மெனோபாஸ் விளைவுகள் என்று நினைத்துக் கொள்வார்கள். இதனால் அவர்கள் சிகிச்சை எடுக்க தவறிவிடுவதால், அவர்களின் ஆரோக்கியம் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

ஹைப்போ தைராய்டிசம்

மலச்சிக்கல், தசை பலவீனம், எடை அதிகரிப்பு, மூட்டு அல்லது தசை வலி, மனச்சோர்வு, வறண்ட சருமம், முடி உதிர்தல், இதய துடிப்பில் மாற்றம், வீங்கிய முகம், கரகரப்பான குரல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு போன்றவை அறிகுறிகளாக தென்படும். தைராய்டு சுரப்பி போதிய அளவு தைராய்டு ஹார்மோன்களை உருவாக்கவில்லை என்றால் ஏற்படும். இதற்கு மருந்துகள் கொண்டு சிகிச்சை பெறலாம். இந்த மருந்துகளை ஒருவர் வாழ்நாள் முழுதும் எடுக்க வேண்டும்.

ஹைப்பர் தைராய்டிசம்

அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பதால் ஏற்படும் பிரச்னை. இது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் இதயத் துடிப்பு போன்ற உங்கள் உடலின் பல செயல்பாடுகளை துரிதப்படுத்தும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். எடை இழப்பு, வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவது, வேகமான இதயத் துடிப்பு, பதட்டம், தூங்குவதில் சிக்கல், கைகள் மற்றும் விரல்களில் நடுக்கம், அதிக வியர்வை, தசை பலவீனம், வயிற்றுப்போக்கு, கண்களில் வீக்கம் அல்லது எரிச்சல் ஆகியவை அடங்கும். இது ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு ேநாய்க்கான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் எலும்பு பலவீனமாகும், உடையும்.

தைராய்டு புற்றுநோய்

தைராய்டு புற்றுநோய் என்பது ஒரு அரிய நோயாகும். இது 30 வயதிற்குட்பட்ட அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்று வந்தால் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து மீள முடியும். கழுத்தின் முன்பகுதியில் வலியற்ற கட்டி அல்லது வீக்கம், கழுத்து பகுதியில் ஏற்படும் திடீர் வீக்கம், அதிக நாட்கள் நீடிக்கும் தொண்டை கரகரப்பு, தொண்டையில் புண், விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

தைராய்டு சுரப்பியின் அளவு சிறியதாக இருந்தாலும், இவை வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. நோயின் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை பெறுவது அவசியம்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post பெண்களை தாக்கும் தைராய்டு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கோடையை சமாளிக்க டிப்ஸ்…