×

குமரியாகும் குட்டீஸுக்கு இயன்முறை மருத்துவம் சொல்வதென்ன?

நன்றி குங்குமம் தோழி

எல்லோர் வீட்டிலும் துறுதுறுவென சுற்றித் திரிந்து, வாயாடிய குட்டிப்பெண் அமைதியான, மென்மையான புதுக் குமரியாக மாறுவதை நாம் நிறைவான உற்சாகத்தோடும், சந்தோஷத்தோடும் கொண்டாடுவோம். ஏனெனில், அவள் பூக்கத் தொடங்கிவிட்டதால். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் பூப்பெய்துதல் முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை எதற்கெடுத்தாலும் பயம், பதட்டம், பிரச்னைகள், செலவுகள், தீர்க்க முடியாமல் சிக்கிக்கொள்வது என பலவற்றை சந்தித்து வருகிறோம். எனவே, தொந்தரவுகள் இல்லாத பூப்பெய்துதலையும், அதற்கு அடுத்து வரும் மாதவிடாய் சுழற்சிகளையும் கொண்டாடுவதற்கு இயன்முறை மருத்துவத்தில் என்ன பங்கு உள்ளது என்பதை இந்தக் கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்வோம், வாருங்கள்!

மெனார்க்கி…

முதல் கருமுட்டை வளர்ந்து, முதிர்ந்து, வெடித்து கருப்பைக்கு வரும். அங்கே விந்தணுவுடன் சேராததால் கருப்பை உட்சுவர் திசுக்களுடனும், ரத்தத்துடனும் சேர்ந்து வெளியே மாதவிடாயாக வரும். இதுவே மெனார்க்கி (Menarche).பதினொரு வயது முதல் பதினான்கு வயது வரை எப்போது வேண்டுமானாலும் இது நிகழலாம்.

வெறும் முதல் மாதவிடாயாக மட்டும் இல்லாமல், அதற்கு ஒரு வருடம் முன்பாகவே குட்டிப் பெண்களின் உடலில், மனதில், மூளையில் மாற்றம் நிகழத் தொடங்கும். உதாரணமாக, பிறப்புறுப்பின் மேல், அக்குளில் முடி வளர்வது, முகத்தில், மேல் முதுகில் முகப்பரு வருதல், மார்பகங்களும், இடுப்புப் பகுதியும் விரிந்து வளர்வது, வாயாடிய குட்டீஸ் மென்மையாக மாறுவது, மென்மையாக இருந்த குட்டீஸ் வாயாடுவது, உடலில் அதிகம் கொழுப்பு சேர்வது, எதிர்த்துப் பேசுவது, சுய முடிவுகள் எடுப்பது, எதிர் பாலினத்தரிடம் பேசாமல் இருப்பது என நாம் யாவையும் பார்த்திருப்போம்.

பூப்பெய்துதல் இனப்பெருக்கத்தின் முதல் நிலை என்பதால், இவ்வாறு உடலும் மனமும் அதற்குத் தயாராவதால் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது.

சில சிக்கல்கள்…

* மூளையிலுள்ள ஹைப்போதலாமஸ் (Hypothalamus), பிட்யூட்டரி (pituitary) போன்ற உறுப்புகள் சினைப்பையுடன் (Ovary) ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. இதனையே ஹைப்போ தலாமிக் பிட்யூட்டரி ஓவேரியன் ஆக்சிஸ் (HPO axis) என்று மருத்துவத்தில் அழைப்போம். பூப்பெய்திய பின்னும் இந்த ஆக்சிஸ்சின் செயல்பாடுகள் முழுதாக முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால், பூப்படைந்த பின் வரும் மாதவிடாய் சுழற்சிகள் சீரற்று இருப்பது இயல்பே.

*பூப்பெய்திய பிறகு பெண் குழந்தைகளின் உடல் முற்றிலும் ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில் என்பதால், அவர்கள் உண்ணும் உணவு, வாழ்வியல் முறை என அனைத்தும் ஹார்மோன்களின் சுரப்பு, அளவு, நேரம் என்று எல்லாவற்றையும் பாதிக்கும். எனவே, போதிய விழிப்புணர்வை முதலிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது அவசியம்.

*மாதம் தவறாமல் வருவது, மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் உதிரப்போக்கு நிற்பது, அதிகமும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் சீராக உதிரப்போக்கு வெளியேறுவது என ஒரு முறையான மாதவிடாய் சுழற்சியின் சில விஷயங்கள் பூப்பெய்திய பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இதுவும் இயல்பே.

இயன்முறை மருத்துவம்…

அதிக உதிரப்போக்கு இருந்தால் அதை நிற்கச்செய்ய மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். மற்றபடி சீரற்ற உதிரப்போக்கு என்பது பூப்பெய்திய புதிதில் இயல்பு என்பதால் இதற்கென மருந்து மாத்திரைகள் அவசியம் இல்லை.போதிய உடற்பயிற்சிகளை தினசரி செய்து வருவதால் ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், சில வருடங்கள் கழித்து வரும் பி.சி.ஓ.டி, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, காரணமின்றி ஏற்படும் சீரற்ற மாதவிடாய் சுழற்சியின்மை போன்றவற்றை எளிதில் தடுக்கலாம்.

தொடர் உடற்பயிற்சிகள் எச்.பி.ஓ ஆக்சிஸ்சினை சீக்கிரம் முதிர்ச்சியடைய செய்வதால், மாதவிடாய் சுழற்சி மாதம்தோறும் சீராய் இயங்கும். இதனால் ஹார்மோன்களின் சுரப்பும் சீராய் இருக்கும். மேலும், இயல்பாகவே பெண்களுக்கு இனப்பெருக்க ஹார்மோன்களினால் ஏற்படும் உடற்பருமனையும் கட்டுக்குள் வைக்கலாம்.உடற்பயிற்சிகள் என்றதும் அதிக எடை தூக்க வேண்டுமோ என பயப்பட வேண்டாம். எளிமையான அதேநேரம், குட்டீஸுக்கு ஏற்றவாறு பொழுதுபோக்காக உடற்பயிற்சிகள் இருக்கும் என்பதால், அவர்களால் ஆர்வமுடன் பங்கெடுக்க முடியும்.

மேலும் நீச்சல் பயிற்சி, நடனம், டீஸும்பா, ஏரோபிக்ஸ், டென்னிஸ் போன்ற ஏதேனும் ஒரு வெளி விளையாட்டுகளில் ஈடுபடலாம். இதில் எதிலேனும் ஒன்றில் ஆர்வம் இருந்தால் அதனை வாரத்தில் மூன்று முறையாவது செய்து வரலாம். ஆனாலும், இயன்முறை மருத்துவரை அணுகி வார்ம்அப் மற்றும் கூள்டவுன் போன்ற அத்தியாவசிய உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளுதல் அவசியம்.

விளைவுகள்…

சீரற்ற மாதவிடாயினால் கீழ்க்கண்ட விளைவுகள் பின்னாளில் வரும் அபாயங்கள் உள்ளன.

*ரத்த சோகை.

*உடல்பருமன்.

*இன்சுலின் எதிர்ப்புத் தன்மை.

*பி.சி.ஓ.டி (சினைப்பை நீர்க்கட்டிகள்).

*கருத்தரிப்பதில் தாமதம்.

*நின்றக் கரு நிலைப்பதற்கு சிரமம்.

*நின்றக் கரு குறைவுற்றதாய் இருத்தல்.

*திருமணமான பின்பும் சீரற்ற மாதவிடாய் சுழற்சியானது தொடர்வது.

*சர்க்கரை நோய்.

*ரத்தக் கொழுப்பு அளவு அதிகரித்தல்.

*கெட்டக் கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பின் சமச்சீரின்மை.

*இனிப்பு, நொறுக்குத் தீனி போன்ற தின்பண்டங்கள் மீது ஆர்வம் கூடி அதிகமாக உண்பது.

*தைராய்டு சுரக்கும் அளவுகளில் மாற்றம்.

வருமுன் தடுக்க…

பூப்பெய்திய புதிதில் சீரற்ற மாதவிடாய் இயல்பு என்றாலும், ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளும் அதற்கு காரணம் என்பதால் அதனை தடுக்க இதோ டிப்ஸ்.

*தினமும் இருபது நிமிடம் சூரிய ஒளியில் இருப்பது. வெயிலில் இருப்பதால் வைட்டமின் டி சத்து மட்டும் கிடைக்கும் என்பதில்லை. மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோனும் சுரக்கும். இதன் பயன் முறையான சர்கார்டியன் ரிதம் (Circadian Rhythm), முறையானத் தூக்கம், முறையான மாதவிடாய் சுழற்சி எனப் பல உண்டு.

*தினசரி எட்டு மணி நேரத் தூக்கம்.

*தினமும் முப்பது நிமிடம் உடல் உழைப்பு தரும் வேலைகளில் ஈடுபடுதல்.

*சூரிய நமஸ்காரம், யோகா போன்றவற்றையும் தினசரி செய்து வரலாம்.

*சரிவிகித உணவு முறையை இளம் பருவத்தினருக்கு அறிவுறுத்துதல் அவசியம்.

*முகத்தில் எண்ணெய் பசை இச்சமயம் வரும் என்பதால், நாம் கொழுப்பு உணவுகளை அழகியலுக்காக கொடுப்பதில்லை. இது முற்றிலும் தவறு. அவகேடோ, வேர்க்கடலை, எள், நெய் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியம்.

*எண்ணெயில் வறுத்த உணவுகள், பிராய்லர் கோழி, மைதா, மற்ற பேக்கரி தின்பண்டங்கள் உட்கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

*தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீராவது அருந்துதல் அவசியம். தேவைக்கு அதிகம் உள்ள ஹார்மோன்கள் தண்ணீர் மூலம் வெளியேற்றப்படும்.

*நட்பு வட்டத்தில் சண்டை, வீட்டில் கோபம், தேர்வு குறித்த பயம் என இளம் பருவத்தினருக்கு எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரஸ் (Stress) வருவது இயல்பே. இதனை முடிந்த வரை பெற்றோர்கள் நல்லமுறையில் கையாண்டு அவர்கள் மனநலனைக் காப்பது அவசியம்.

மொத்தத்தில் பூப்பெய்திய நம் வீட்டுப் பூக்களின் உடல் நலமும், நம் வருங்கால சந்ததிகளின் நலமும் பெற்றோர்களாகிய நமது கைகளில்தான் இருக்கிறது என்பதால், ஆரோக்கியம் பேண ஒவ்வொரு குட்டிப் பெண்மணிகளுக்கும் கற்றுக்கொடுப்போம்.

விரைவான பூப்பெய்துதலுக்கு காரணிகள்…

*மரபணு.

*ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம்.

*உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகமாய் இருந்தால் (உடலின் பி.எம்.ஐ அளவு அதிகமாய் இருக்கும். இதனால் ரத்தத்தில் லெப்டின் எனும் ரசாயன அளவு அதிகமாகி பூப்பெய்துதலை தூண்டும்).

*அதீத உடல் உழைப்பு இருந்தால் (அதாவது, சிறு வயதிலிருந்தே அதிகம் நடனமாடுவது, விளையாட்டுத் துறையில் இருப்பது போன்றவை).

The post குமரியாகும் குட்டீஸுக்கு இயன்முறை மருத்துவம் சொல்வதென்ன? appeared first on Dinakaran.

Tags :
× RELATED அலுவலக உறவுகள்… ஓர் உளவியல் அலசல்!