×

90 சதவீதம் பெண்களை தாக்கும் ஆட்டோ இம்யூன் நோய்கள்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது எலும்பு மற்றும் மூட்டினை பாதிக்கக்கூடிய ருமடாலஜி. இந்த நோயினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று எலும்பு மற்றும் மூட்டில் ஏற்படும் பிரச்னை. மற்றொன்று connective tissue disorder vasculitis. பொதுவாக எலும்பு சம்பந்தமான பிரச்ைன என்றால், ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் என்று சொல்லப்படும் முடக்குவாதம், மூட்டு அழற்சியான ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், சொரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சொரியாடிக் ஆர்த்ரைடிஸ், முதுகு தண்டு வாதம் என்று அழைக்கப்படும் ஸ்பாண்டல் ஆர்த்ரைடிஸ்…. இவ்வாறு ஆர்த்ரைடிசில் பல வகைகள் உள்ளன.

அதில் முக்கியமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது மூட்டுத் தேய்மானமான ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ். இது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்னை. அதிக வேலை ெசய்யும் போது மூட்டுப் பகுதியில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். இவர்கள் ஓய்வு எடுத்தால் வலி குறைந்திடும். இவை தவிர மற்ற அனைத்து ஆர்த்ரைடிஸ் பிரச்னைகளும் மூட்டு வாதம் என்று சொல்லக்கூடிய ருமடாய்ட் என்ற நோய் வகையை சார்ந்தது.

இவர்களுக்கு தூங்கி எழும் போது வலி அதிகமாகும், வேலை செய்ய செய்ய வலி தன்னால் குறையும். 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் குறிப்பாக பெண்களைதான் இந்த நோய் பெரும்பாலும் பாதிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதால், அவர்களைதான் ருமடாய்ட் அதிக அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆட்டோ இம்யூன் நோயினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்கிறார் வாத நோய் நிபுணர் டாக்டர் ஷ்யாம். இவர் ஆட்டோ இம்யூன் காரணமாக பெண்களை தாக்கும் நோய் குறித்து விவரித்தார்.

‘‘நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக உடலில் உள்ள ஆரோக்கிய செல்களை சேதப்படுத்துவதைதான் ஆட்டோ இம்யூன் நோய்கள் என்று குறிப்பிடுவோம். இது பெரும்பாலும் மரபியல் காரணமாக ஏற்படும் அல்லது வைரஸ் கிருமியின் தாக்கம் ஏற்கனவே செயலில் இருக்கும் ஆட்டோ இம்யூனை தூண்டிவிடும். ஒரு முறை இந்த அமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் அதனை கட்டுப்பாட்டில் வைக்க முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்த முடியாது. அதே சமயம் இதனால் உடலில் உள்ள உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பது அவசியம். உதாரணத்திற்கு மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் அது ஆர்த்ரைடிஸ். இது அடிப்படை பிரச்னை.

அதுவே மூட்டில் உள்ள புரதங்களை பாதித்தால், அது ஆட்டோ இம்யூன் நோய். ஆர்த்ரைடிஸ் என்பது சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஒரு குறைபாடுதான். இதனால் மூட்டுத் தேய்மானம் ஏற்படும். அதுவே ஆட்டோ இம்யூன் பாதிப்பு என்றால் மற்ற உறுப்புகளான நுரையீரல், கண், இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தகுந்த சிகிச்சை எடுப்பது அவசியம்.

இதில் மிகவும் அரிய வகை நோய்களாக SLE (Systemic Lupus Erythematosus) மற்றும் APS (Antiphospholipid Syndrome) என இரண்டு நோய்களை குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் ஆண்களை விட பெண்களைதான் அதிகம் பாதிக்கிறது. பத்தில் ஒன்பது பெண்களுக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது சிக்கலான நோய் என்பதால், எந்த உறுப்பினை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் கண்காணித்து அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூட்டு வலியில் ஆரம்பித்து சருமத்தில் தடிப்புகள் ஏற்படும். முடி உதிரும். ஜுரம், அனிமியா போன்ற பிரச்னைகள் திடீரென்று ஏற்படும். திருமணமான பெண்களுக்கு கருக்கலைப்பு நிகழும். இவ்வாறு பலவித அறிகுறிகள் தென்படும். ஆட்டோ இம்யூன் அமைப்பு பொருத்து லேசான மற்றும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். லேசான பாதிப்பு என்றால், மூட்டு மற்றும் சருமத்தினை தாக்கும். இதுவே கடுமையாக இருந்தால் உறுப்புகளை தாக்கும் அபாயம் உள்ளது. மருத்துவரின் தொடர் கண்காணிப்பில்
இருந்தால் அந்த நோயினை கட்டுப்பாட்டில் வைக்க
முடியும்.

APS ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு உள்ள பெண்களுக்கு ெதாடர் கருக்கலைப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது அவர்கள் APS பாதிப்பு உள்ளதா என்று கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்கு இதய குழாய் அல்லது நரம்புகளிலும் ரத்த உறைவு ஏற்படலாம். அல்லது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டின் அளவு குறையலாம். ரத்தம் உறையாமல் இருப்பதை தடுக்க அதற்கான மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொண்டு டாக்டரின் ஆலோசனையில் குழந்தை பேறு பெறலாம்.

ஆட்டோ இம்யூன் நோய்கள் இவை இரண்டால்தான் ஏற்படும் என்று சொல்ல முடியாது. தைராய்டு, சர்க்கரை ேநாய்களும் ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோய்கள்தான். நோயால் பாதிக்கப்பட்ட மரபணு அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். அது அமைதியாக உடலில் தங்கி இருந்தாலும், ஏதாவது நோய் தொற்று காரணமாக தூண்டப்படும் போது, அவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். அதில் ஒரு வகை பாதிப்பு தான் SLE மற்றும் APS. முறையான சிகிச்சை மூலம் நோயினை கட்டுப்பாட்டில் வைப்பதால், அவர்கள் தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபட முடியும்.

இவர்களின் உணவில் கட்டுப்பாடு அவசியம் இல்லை என்றாலும், துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவது அவசியம். SLE பிரச்னை உள்ளவர்களுக்கு சூரியக் கதிரில் இருந்து வெளியாகும் அல்ட்ரா வயலட் கதிர்கள் நோயின் தன்மையை மேலும் அதிகரிக்கும். அவர்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக சரும பாதுகாப்பினை பின்பற்ற வேண்டும்.

மேலும் கம்ப்யூட்டர், செல்போனில் இருந்து வௌியாகும் கதிர்களும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், UV protector பயன்படுத்துவது அவசியம். தற்போது இதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும் வரும் காலத்தில் அதற்கான மாற்று மருந்துகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. அதுவரை நோயைக் கண்டு அஞ்சாமல், பாதுகாப்பு முறைகளை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வினை வாழலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் ஷ்யாம்.

தொகுப்பு: ஷன்மதி

The post 90 சதவீதம் பெண்களை தாக்கும் ஆட்டோ இம்யூன் நோய்கள்! appeared first on Dinakaran.

Tags : kumkum Doshi ,
× RELATED முகத்தில் முகம் பார்க்கலாம்!