×

ஓலா, உபெர், வாடகை கார் உள்ளிட்ட அனைத்து டாக்ஸி சேவைகளுக்கும் ஒரே சீரான கட்டணம்: கர்நாடக அரசு நடவடிக்கை

பெங்களூரு: வாடகை டாக்ஸிகள் மற்றும் ஆப் அடிப்படையில் இயங்கும் ஓலா, உபெர் போன்ற டாக்ஸி சேவைகளுக்கான கட்டணத்தை கர்நாடக அரசு நிர்ணயித்துள்ளது. கர்நாடகாவில் இந்த புதிய விதிப்படி, டாக்ஸி வாகனங்களின் விலையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலை கொண்ட வாகனங்களுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கான நிலையான கட்டணம் ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கிலோ மீட்டருக்கு ரூ.24 கூடுதல் கட்டணமாக வசூலிக்க அனுமதித்துள்ளது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரம்புக்குள் உள்ள டாக்ஸிகளுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.115 ஆகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.28 கூடுதல் கட்டணமும் வசூலித்து கொள்ளலாம். ரூ.15 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட விலை கொண்ட டாக்ஸிகளுக்கு முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.130 நிலையான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.32 வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேர பயணமான நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கூடுதலாக 10% வசூலிக்க புதிய விதிகள் அனுமதிக்கிறது. முதல் 5 நிமிட காத்திருப்பு நேரம் பயணிகளுக்கு இலவசம். அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.1 கட்டணம் பொருந்தும். பயணிகளிடமிருந்து 5% ஜிஎஸ்டி மற்றும் சுங்க கட்டணங்களை வசூலிக்கவும் டாக்ஸி இயக்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண விதியானது, செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவைகளுக்கான அதிக கட்டணங்களை நீக்கியுள்ளது. இதற்கு முன் இந்த வகை டாக்ஸிகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, ‘பீக் ஹவர்ஸ்’ கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அரசின் புதிய விதிகளை ஓலா, உபெர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஆனால், அடிப்படைக் கட்டணம் அதிகரித்துள்ளதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post ஓலா, உபெர், வாடகை கார் உள்ளிட்ட அனைத்து டாக்ஸி சேவைகளுக்கும் ஒரே சீரான கட்டணம்: கர்நாடக அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ola ,Uber ,Karnataka Govt. ,BENGALURU ,Karnataka government ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம்...