சென்னை : மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூவலைத்தள பக்கத்தில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாகிஸ்தான் சிறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் காசிமேடு மீனவர்களை மீட்டுத்தருமாறு அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல, நேற்று வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனவே, பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை மீட்பதோடு, இனிவரும் காலங்களில் எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் : தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.