வில்லியனூர், பிப். 5: வில்லியனூரில் எதிரிகளை கொலை செய்வதற்கு ஒத்திகையாக அரசு பள்ளி சுவரின் மீது பெட்ரோல் குண்டுவீசி சோதனை செய்த 4 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுவையில் நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்வது, மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வில்லியனூர் அருகே அரசூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது பள்ளி கட்டிட சுவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சுல்தான்பேட்டை முகமதியா நகரை சேர்ந்த முகமது ஷமீர் (20), அரசூர் குளத்துமேடு பகுதியை சேர்ந்த தனுஷ் (22), ஸ்ரீராம் (20), ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
உடனே அடுத்த 2 மணிநேரத்தில் போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் இரவு அரசூர் அரசு பள்ளி அருகே அமர்ந்து மது அருந்தி உள்ளனர். பின்னர், முகமது சமீர் காலி பீர்பாட்டிலில் பெட்ரோல் பிடித்து, அதனை கொளுத்தி அரசு பள்ளி சுவரில் அடித்து எப்படி வெடிக்கிறது என்று சோதனை செய்தார். அப்போது, பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வெளியே வந்தனர். இதையடுத்து முகமது சமீர் உள்ளிட்ட 4 பேரும் தப்பி ஓடியது தெரியவந்தது.
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் முகமது சமீருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவர்களை கொலை செய்வதற்கு ஒத்திகையாக பெட்ரோல் குண்டு தயாரித்து சோதனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் முகமது சமீர் மீது தமிழக காவல் நிலையங்களில் போக்சோ, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தில் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
The post பள்ளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது appeared first on Dinakaran.