×

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் நீடிப்பு மோடி கொடூர அநீதி செய்து விட்டார்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி கொடூர அநீதி இழைத்து விட்டதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டீஸ் இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க சிறுபான்மையாக வசிக்கும் நாகா, குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி இருசமூகத்தினரும் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். தற்போது மாநிலத்தில் அமைதி நிலவினாலும், அவ்வப்போது துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் முதல்வர் என் பிரேன் சிங் நேற்று முன்தினம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்து என் பிரேன் சிங் தன் ட்விட்டர் பதிவில், “மாநில நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பல்வேறு முக்கியமான விஷயங்களை விவாதித்தேன். மணிப்பூர் மக்கள் நலனுக்காக ஒன்றிய அரசு விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது” என்று பதிவிட்டிருந்தார். இதனால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என செய்திகள் வௌியாகி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் வன்முறை நடந்து 9 மாதங்களை கடந்தும் அதுபற்றி பிரதமர் மோடி இன்னும் வாய் திறந்து பேசவில்லை. ரோட் ஷோவுக்காக கவுகாத்தி செல்லும் பிரதமர் மோடியால், இன்னமும் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்ல முடியவில்லை. இந்த விவகாரத்தில் மணிப்பூர் மக்களுக்கு மோடி கொடூர அநீதி இழைத்து விட்டார்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

The post மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் நீடிப்பு மோடி கொடூர அநீதி செய்து விட்டார்: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PM ,Manipur ,Modi ,Congress ,New Delhi ,BAJA ALLIANCE ,MINISTER ,BREN SINGH ,NORTHEASTERN STATES ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!