×

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சிஎம்டிஏ, போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை: சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்ற, இறக்க அனுமதிக்க கோரிக்கை

சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சிஎம்டிஏ, போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்ற, இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கடந்த ஜன.24ம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள், ஆம்னி பேருந்துகள் சங்கம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் ஆம்னி பேருந்துகள் இயகத்தை முழுமையாக கிளாம்பாக்கத்திற்கு மற்ற கால அவகாசம் வழங்க வேண்டும். சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருக்கக்கூடிய அலுவலகம் மற்றும் பணிமணைகளில் ஆம்னி பேருந்துகளை பராமரித்து, பராமரிப்பிற்கு பின் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நகர் பகுதிகள் வழியாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். தென் பகுதிகளிலிருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் வரும் போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்னை நகர் பகுதிகள் மற்றும் அலுவலகம் மற்றும் பணிமணைகளில் ஆம்னி பேருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் ஜனவரி 24ம் தேதிக்கு முன் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்கள் சென்னை நகர் பகுதிகளில் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதித்தது போல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும் சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை அரசு உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகரின் எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல கிளாம்பாக்கம் தான் எங்கள் எதிர்காலம் என்று தீர்வாகிவிட்ட நிலையில், இங்கிருந்து அங்கு அலுவலகங்களை மாற்ற எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளோம். அதேபோல குறிப்பிட்ட கால அவகாசம் என்ன, அதுவரை பயணிகளை எங்கு ஏற்றுவீர்கள், எங்கு இறக்குவீர்கள், என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். இதனை இரண்டு நாட்களுக்குள் பேசி தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கோரிக்கைகளை அவர்கள் முழுவதுமாக கேட்டிருக்கிறார்கள், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சிஎம்டிஏ, போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை: சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்ற, இறக்க அனுமதிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CMDA ,Transport Department ,Omni Bus ,Chennai city ,CHENNAI ,department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...