×

துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை; பட்டப்பகலில் 12 கி.மீ., தூரம் பைக்கில் சடலத்தை எடுத்து சென்றது அம்பலம்

பல்லாவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் சிறுகளத்தூர் அருகே, கடந்த மாதம் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அதை, போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன் (33) என்பதும், அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னுடன் வேலை செய்து வந்த திலீப்குமார் என்பவரால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு, அவரது தலை, கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, திலீப்குமார் மற்றும் அவரது நண்பர் போரூர் அடுத்த ராமாபுரம், சத்தியா நகரை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (22) ஆகிய இருவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பூமிநாதன் (33), நந்தம்பாக்கத்தில் தங்கி, வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருடன் பணிபுரிந்து வந்த மற்றொரு காவலாளியான குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், சரஸ்வதி நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த திலீப்குமார் (34) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்கள் வேலை செய்த இடத்தில் பணிபுரிந்த பெண் காவலாளியுடன் பூமிநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், இவரது நண்பர் திலீப்குமாருக்கும் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, உல்லாசம் அனுபவித்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் பூமிநாதனுக்கு உள்ள தொடர்பு குறித்து திலீப்குமாருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், பூமிநாதனை நேரில் வரவழைத்து, அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் திலீப்குமாருக்கும், பூமிநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார், பூமிநாதனை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி தனது நண்பரான விக்கி (எ) விக்னேசுடன் சேர்ந்து, மது அருந்தலாம் என நைசாக பேசி, பூமிநாதனை பைக்கில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அழைத்து செல்ல முயன்றனர். அவர் வர மறுத்ததால், ஆத்திரமடைந்த திலீப்குமார் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பூமிநாதன் தலையை நோக்கி சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் இருக்க, சுமார் 12 கிலோ மீட்டர் பைக்கில் அமர வைத்து, சிறுகளத்தூரில் உள்ள திலீப்குமார் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பூமிநாதன் உடலில் இருந்து கை, கால், தலை ஆகியவற்றை பட்டாக் கத்தியால் துண்டு, துண்டாக வெட்டி அகற்றியுள்ளனர்.

பின்னர், வீட்டின் பின்புறத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து வந்து, அதனை பூமிநாதன் உடலில் கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசிவிட்டு, தலை மற்றும் கைகளை வண்டலூர் ஏரியில் வீசியது தெரியவந்தது. இதனிடையே திலீப்குமார் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு கொலைக்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகள், 17 தோட்டாக்கள் மற்றும் 2 பெரிய பட்டா கத்திகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை; பட்டப்பகலில் 12 கி.மீ., தூரம் பைக்கில் சடலத்தை எடுத்து சென்றது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Pallavaram ,Sirukalathur ,Chembarambakkam lake ,Chrompet ,Cuddalore ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...