×

பல்லாவரம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி: தீயணைப்பு துறையினர் மீட்டனர்

பல்லாவரம்: பல்லாவரம் – குன்றத்தூர் பிரதான சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் காலை, மாலை மட்டுமன்றி எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. தற்போது, தாம்பரம் மாநகராட்சி சார்பில் இந்த சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால், சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எண்ணூரில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை இந்த சாலை வழியாக குன்றத்தூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. பம்மல், கிருஷ்ணா நகர் பிரதான சாலையை கடந்தபோது, சாலை பள்ளத்தில் இந்த லாரி சிக்கியது. இதனால் லாரி எந்நேரத்திலும் கவிழலாம் என்ற அபாயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் குமார், உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்து தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, 5 பொக்லைன் வாகனங்களை பாதுகாப்பு அரண் போன்று நிறுத்தி, சரிந்து நின்ற லாரியை லாவகமாக நிமிர்த்தி, வெற்றிகரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் யாரையும் அருகில் செல்லவும் அனுமதிக்கவில்லை. சங்கர் நகர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் அரசு பேருந்து மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்றும் அடுத்தடுத்து இதைப்போன்று சாலையில் பதிந்து நின்றது குறிப்பிடத்தக்கது. எனவே, மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பதை தடுக்கும் வகையில், சேதமடைந்து காணப்படும் பல்லாவரம் -குன்றத்தூர் பிரதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post பல்லாவரம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி: தீயணைப்பு துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Kunradthur ,Tambaram Corporation ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு...