×

சிற்றாறு சிலோன் காலனியில் பிடிபட்ட சிறுத்தை குட்டி உடல்நலம் தேறுகிறது

*தாயை தேடும் பணி தீவிரம்

அருமனை : சிற்றாறு சிலோன் காலனியில் பிடிபட்ட சிறுத்தை குட்டி உடல் நலம் தேறி வருகிறது. அதன் தாயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அருமனை அருகே சிற்றாறு சிலோன் காலனியில் கடந்த இரு நாட்கள் முன்பு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் 4 மாதங்கள் ஆன சிறுத்தை குட்டி ஒன்று மீட்கப்பட்டது. மிகவும் சோர்வாக வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த அக்குட்டி மாவட்ட வன அலுவர் இளையராஜா உத்தரவின் ேபரில் வனத்துறையினர் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட்டில் உள்ள குரங்குகள் இனபெருக்க தடை அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன் மேற்பார்வையில் சிறுத்தை குட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிடிபட்ட சிறுத்தை குட்டிக்கு கெனைன் டிஸ்டம்பர் என்ற கொடும் வைரசின் தாக்குதல் அறிகுறிகள் காணப்பட்டன. எனவே சிறுத்தை குட்டியின் ரத்தம் மற்றும் உமிழ்நீரை எடுத்து சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுத்தை குட்டிக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் டிரிப் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் சிறுத்தை குட்டி உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, சத்தமிட தொடங்கியது. மேலும் கால்களை தரையில் தட்டி விளையாட தொடங்கியுள்ளது. இறைச்சி துண்டுகளுடன் வைக்கப்பட்ட சூப்பை அருந்தியது. வாயில் இருந்து வடிந்த உமிழ்நீரும் நின்று விட்டது.

இதற்கிடையே கெனைன் டிஸ்டம்பர் நோய் 100 சதவீதம் குணமடையாது, அதன் பாதிப்பு மிதமான அளவில் இருக்கும். மேலும் வேறு விலங்குகளுக்கும் பரவும் வாய்ப்பு உண்டு. எனவே அதனை தனிமையில் வைத்து பாதுகாக்க வேண்டும். இதனால், சிறுத்தை குட்டியின் ரத்த பரிசோதனை அறிக்கைக்காக வனத்துறையினர் காத்து கொண்டு உள்ளனர். இதுபற்றி மாவட்ட வனஅலுவலர் இளையராஜாவிடம் கேட்டபோது, சிறுத்தை குட்டி உடல்நலம் வெகுவாக தேறிவிட்டது. இயல்பு நிலைக்கு வந்து கொண்டுள்ளது.

தற்போது சூப் அருந்துகிறது. அதற்கு மேலும் 3 நாட்கள் சிகிச்சை அவசியம். 4 மாத குட்டி என்பதால், அதனை தனிமையில் காட்டில் விட முடியாது. எனவே அதன் தாய் அப்பகுதியில் இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதால், அதனை தேடி வருகிறோம்.

இதற்காக 3 கேமராக்கள் சிலோன் காலனி பகுதி வனத்தில் பொருத்தி கண்காணித்து வருகிறோம். மேலும், அதற்கு கெனைன் டிஸ்டெம்பர் என்பது உறுதியானால், இதனை தனியாக வளர்ப்பது அவசியம். எனவே தாய் கிடைக்கா விட்டாலோ, அல்லது டிஸ்டம்பர் பாசிட்டிவ் என அறிக்கை வந்தாலோ உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, அதை வண்டலூருக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று வளர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிற்றாறு சிலோன் காலனியில் பிடிபட்ட சிறுத்தை குட்டி உடல்நலம் தேறுகிறது appeared first on Dinakaran.

Tags : Ceylon Ceylon colony ,Chittaru Ceylon Colony ,Arumanai ,Dinakaran ,
× RELATED விறகு சேகரித்த மூதாட்டிக்கு வெட்டு தம்பதி மீது வழக்கு