*தீயணைப்பு துறையினர் மீட்டனர்
மார்த்தாண்டம் : குழித்துறையில் மழைநீர் ஓடையில் தவறி விழுந்து கால் உடைந்த நிலையில் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளியை, மறுநாள் காலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (60). கூலித்தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. இந்த நிலையில் அர்ஜுனன் நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் வேலை முடிந்த பின்னர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார்.
இதற்காக பாலத்தின் கீழ் பகுதிக்கு சாஸ்தான்கோவில் வழியாக இறங்கி உள்ளார். அப்போது நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள மழைநீர் சேகரிப்பு ஓடையில் விழுந்துள்ளார். இதில் அர்ஜுனனின் கால் உடைந்தது. இதனால் அவரால் ஓடையில் இருந்து எழ முடியவில்லை.உயிர்பயத்தில் அர்ஜுனன் கத்தி கூச்சலிட்டார். ஆனால் அந்த வழியாக மக்கள் நடமாட்டமே இல்லை. பலமுறை கூச்சலிட்டும் யாரும் வராததால் சோர்வடைந்த அர்ஜுனன் வேறு வழியில்லாமல் ஓடைக்குள்ளேயே கிடந்துள்ளார்.
அங்கு தண்ணீர் இல்லாததால் உயிர் தப்பினார். ஆனாலும் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய நிலையில் அர்ஜுனன் தவித்தார். இதையடுத்து நேற்று காலையில் மீண்டும் அர்ஜுனன் உதவிகேட்டு கூச்சலிட்டார். அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த சிலருக்கு அர்ஜுனனின் கூக்குரல் கேட்டது.
அவர்கள் உடனே அங்கு சென்று அர்ஜுனனின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மழைநீரோடையில் சிக்கியிருந்த அர்ஜுனனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குழித்துறை அருகே பரபரப்பு ஓடையில் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி appeared first on Dinakaran.