×

கூடுதல் விலை கிடைப்பதால் பூண்டு அறுவடை தீவிரம்

 

ஊட்டி,பிப்.3: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டிற்கு கூடுதல் விலை கிடைப்பதால் தற்போது பூண்டு அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ்,முள்ளங்கி மற்றும் பூண்டு ஆகியவை பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு அதிக சுவை உள்ளதால் சமவெளி பகுதிகளில் இதற்கு கிராக்கி அதிகமாக உள்ளது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு வெளி மாநிலங்களில் கிராக்கி அதிகமாக உள்ளதால், இதற்கு எப்போதும் விலை அதிகமாக காணப்படும்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூண்டு விதைகள் மற்றும் நாட்டு மருந்து தயாரிப்பதற்காக அதிக அளவு வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நீலகிரி பூண்டிற்கு எப்போதும் ஒரு சீரான விலை கிடைக்கும்.ஆனால், சில சமயங்களில் வெளி மாநிலங்களில் இருந்து பூண்டு அதிக அளவு வரும்போது விலை குறைவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக நீலகிரியில் விளையும் பூண்டிற்கு அதிக விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விலை கிடைக்கிறது.இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பூண்டுகளை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள கொல்லிமலை முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது விவசாயிகள் பூண்டு அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post கூடுதல் விலை கிடைப்பதால் பூண்டு அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்