×

மழை, பலத்த காற்று காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட ஊட்டி பூண்டு பயிர்கள் சாய்ந்தன: வருவாய் இழப்பால் விவசாயிகள் கலக்கம்


ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிர்கள் மழை மற்றும் காற்று காரணமாக சாய்ந்துள்ளதால் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டும் நிலை உருவாகி உள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைகிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிப்படுகிறது. இதில் அதிகபட்சமாக கேரட் 2200 ஹெக்டேர் பரப்பளவிலும், உருளைகிழங்கு 1200 ஹெக்டேர் பரப்பளவிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிாிடப்படுகிறது.

இதர காய்கறிகள் 2700 ஹெக்டரில் பயிாிடப்படுகிறது. கேரட் பயிரிட்டு அறுவடை செய்த பின் விவசாயிகள் பயிர் சுழற்சி முறையில் பூண்டு பயிரிடுவது வழக்கம். ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு நல்ல மவுசு உள்ளது. இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, கல்லக்கொரை ஆடா, இத்தலார், கப்பத்தொரை, கோடப்பமந்து, தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அறுவடைக்கு பின் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டுள்ளனர். இவைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பூண்டு பயிர்களின் தண்டு உடைந்து சாய்ந்துள்ளன. இதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால் மகசூல் குறைய கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தண்டு உடைந்துள்ளதால் அழுகக்கூடிய சூழல் உருவாகியுள்ளதுடன், விரிந்து கெட்டி தன்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட கூடிய சூழல் உருவாகியுள்ளது. பூண்டு பயிர்கள் மேற்கொண்டு சாயாத வண்ணம் அவற்றை கட்டி வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இனிவரும் நாட்களிலும் காற்றின் தாக்கம் அதிகம் இருக்க கூடும் என்பதால் விவசாயிகள் பலரும் பூண்டு பயிர்களை அறுவடை செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பலத்த காற்று காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு பயிர்கள் காற்றில் சாய்ந்து தண்டு உடைந்துள்ளன.

இதனால் காற்றில் பாதிக்காத வண்ணம் அவற்றை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. விளைச்சல் பாதியாக குறையும் என்பதால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும்’’ என்றனர்.

The post மழை, பலத்த காற்று காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட ஊட்டி பூண்டு பயிர்கள் சாய்ந்தன: வருவாய் இழப்பால் விவசாயிகள் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED காபியில் சயனைடு கொடுத்து பெண்...