×

தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி காவலாளியை கொன்ற வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகள் கைது: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்

பல்லாவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில், சிறுகளத்தூர் அருகே, கடந்த மாதம் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலை கிடைக்காத நிலையில், சடலத்தில் இருந்த உள்ளாடை மற்றும் காணாமல் போனவர்கள் விவரங்களை வைத்து விசாரித்தனர். அதில், கடலூரை சேர்ந்த பூமிநாதன் (40) என்பதும், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடலூரை சேர்ந்த பூமிநாதன், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு சென்னை வந்து, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது, அங்கு தன்னுடன் பணிபுரிந்த பெண் காவலாளி நாகலெட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. நாகலெட்சுமி பூமிநாதனுடன் மட்டும் தொடர்பில் இல்லாமல், குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த பிலிப்ஸ் என்ற வாலிபருடனும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பிலிப்ஸூக்கு, நாகலெட்சுமி பூமிநாதனுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், நாகலெட்சுமி பிலிப்ஸூக்கு தெரியாமல் பூமிநாதனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிலிப்ஸ், பூமிநாதனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மாதம் தனது நண்பர் வினோத் என்பவர் மூலம் பூமிநாதனிடம் நைசாக பேசி செம்பரம்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்து, மது ஊற்றிக்கொடுத்து போதை தலைக்கு ஏறியதும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பூமிநாதனை சுட்டுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்தார். பின்னர், அவரது உடலில் இருந்து தலை, கை, கால்கள் ஆகியவற்றை வெட்டி எடுத்து, உடலை மட்டும் கல்லை கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசினர். பின்னர் தலையை மட்டும் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வண்டலூர் பகுதியில் உள்ள ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வினோத் மற்றும் பிலிப்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூமிநாதன் தலை மற்றும் கை, கால்கள் மீட்கப்பட்டன. கைதான இருவருக்கும் துப்பாக்கி எப்படி கிடைத்தது, என விசாரித்து வருகின்றனர்.

 

The post தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி காவலாளியை கொன்ற வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகள் கைது: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Pallavaram ,Kunradathur ,Sembarambakkam lake ,Sirukalathur ,
× RELATED பல்லாவரம் மேம்பாலத்தில் வேன் மோதி கல்லூரி மாணவன் பலி: நண்பர் படுகாயம்