×

திருவில்லிபுத்தூர் அருகே தென்னை, பனைகளை சாய்த்த காட்டு யானைகள்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அதிகளவில் தோப்புகள் உள்ளன. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து இறங்கி வரும் காட்டு யானைகள் விளைநிலங்களில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியும், தோப்புகளில் உள்ள மரங்களை பிடுங்கி எறிந்தும் வருகின்றன. இதனிடையே,கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பந்தப்பாறை பகுதியில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது.

இவைகள் தோப்புகளில் புகுந்து தென்னை, பனை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளன. குறிப்பாக பெருமாள்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட தோப்பில் இருந்த தென்னை மற்றும் பனை மரங்களை நாசம் செய்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பந்தப்பாறை பகுதியில் கடந்த சில மாதமாக யானைகள் முகாமிட்டுள்ளன. தோப்புகளில் உள்ள பனை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

வனத்துறையினர் விவசாயிகளுக்கு பட்டாசுகள் வழங்கி உள்ளனர். அவ்வப்போது யானை இருக்கும் இடங்களை அறிந்து, அதனை வனப்பகுதிக்கு விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் விளைநிலங்களில் பயிர்களையும், தோப்புகளில் மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மற்றும் பனை மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

 

The post திருவில்லிபுத்தூர் அருகே தென்னை, பனைகளை சாய்த்த காட்டு யானைகள்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Tiruvilliputhur ,Western Ghats ,Virudhunagar district ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...