×

அழகான கூந்தலுக்கு உதவும்

நன்றி குங்குமம் டாக்டர்

ஆலிவ் ஆயில்!

அழகான, அடர்த்தியான கருகருவென கூந்தல் பெண்களுக்கு எப்போதும் ஒரு கூடுதல் அழகு தரும். இதன் காரணமாகவே, பெண்கள் எப்போதும் தங்கள் கூந்தல் பராமரிப்பில் தனி கவனம் செலுத்துகிறார்கள். இருந்தாலும், பல பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை போன்றவைகளாகும். இதிலிருந்து விடுபடவும், தலைமுடியை அழகாக பராமரிக்கும் பெரிதும் உதவுகிறது ஆலிவ் ஆயில். ஆலிவ் ஆயில் தேய்த்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம்.

ஆலிவ் ஆயிலில் ஏ, ஈ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. ஆலிவ் ஆயிலில் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.பொடுகுத் தொல்லையை நீக்குவதில் ஆலிவ் ஆயில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக ஸ்கேல்ப் எனப்படும் உச்சந்தலை உலர்ந்துவிடுவதால் தான் பொடுகு வருகிறது. ஆலிவ் ஆயிலை தினமும் உபயோகித்து வந்தால் தலை முடியை ஈரப்பதமாக வைக்கிறது. இதனால் பொடுகுத் தொல்லை அடியோடு நீக்கப்படுகிறது.

இது தலைமுடிக்கு நல்ல போஷாக்கு அளிக்கிறது. இயற்கையான கண்டிஷனரும் கூட. தலைமுடி உடைந்துபோவதை தடுக்கிறது. கூந்தலை மென்மையாக்கி பார்ப்பதற்கு அழகாக வைக்கிறது. தினமும் ஆலிவ் ஆயிலை சில சொட்டுக்கள் எடுத்து உச்சந்தலையிலும் முடியிலும் தடவிக்கொள்வதால் தலையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அழிக்கப்படுகிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் இது அளிக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. முடி வறண்டுபோவதை தடுத்து தலைமுடிக்கு பளபளப்பான தோற்றத்தைத் தருகிறது.

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி உச்சந்தலையில் தடவி தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். அரைமணிநேரம் கழித்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி, முடிகொட்டுவதும் நின்று விடும். கூந்தல் கருகருவென்றும் அடர்த்தியாகவும் வளரும். செம்பட்டை முடி உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்துவந்தால் செம்பட்டை நிறம் மாறி கருமை நிறம் கிடைக்கும்.

தொகுப்பு: தவநிதி

The post அழகான கூந்தலுக்கு உதவும் appeared first on Dinakaran.

Tags : kumkum ,doctor ,Dinakaran ,
× RELATED இயற்கையில் விளைந்த வேளாண்மை பொருட்களே எங்கள் மூலப்பொருட்கள்!