×

பயிற்றுவித்தவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது: போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: பயிற்றுவித்தவர்களை ஒருபோதும் மறக்க கூடாது என்றும், திறமைமிக்க அதிகாரிகளின் முயற்சியால் சென்னை பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது என்றும் போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை பள்ளிகளுக்கு இடையிலான 2023-24ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டரங்கில் இன்று காலை தொடங்கியது. இந்த போட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு ஒலிம்பிக் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளிகள் இன்று ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களை கொண்டு செயல்படுகிறது. மாநகராட்சி பள்ளிகள் என்ற பெயரை மாற்றி இன்று ‘சென்னை பள்ளிகள்’ என்ற பெயருடன் கிட்டத்தட்ட 328 இடங்களில் இயங்கி வருகிறது. 81 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. மாணவ, மாணவிகளை 4 குழுக்களாக பிரித்து பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. துணை ஆணையர், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் முயற்சியால் இந்த அளவுக்கு சென்னை பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. திறமைமிக்க அதிகாரிகள் இருக்கின்ற காரணத்தால் தான் சென்னை மாநகராட்சியானது மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது.

மழை வெள்ளம் வந்தாலும் ஒரே வாரத்தில் சரி செய்யக்கூடிய வகையில் அதிகாரிகள், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊழியர்கள் என எல்லாரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதை முன்மாதிரியாக வைத்து தான் தமிழ்நாட்டில் வேறு மாவட்டங்களில், அதாவது ேகாவை மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் வந்த போது கூட இந்த அதிகாரிகளை அனுப்பி அவற்றை எல்லாம் சரி செய்தோம். எனவே அப்படிப்பட்ட திறமைமிக்க அதிகாரிகள் சென்னை மாநகராட்சியில் பணிபுரிகின்றனர். இதனால் தான் சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. வெளிநாடுகள் என எங்கு சென்று இவர்கள் பணிபுரிந்தாலும், நாங்கள் சென்னை பள்ளியில் படித்தோம் என்றோம் சொல்லக்கூடிய வகையில் சென்னை பள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது.

எனவே படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, மாணவ, மாணவிகள் சாதனை படைத்து வரும் நிலையில், நீங்கள் எங்கு சென்றாலும் ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும், இங்கு பயிற்றுவித்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர்கள் விஸ்வநாதன், சாந்தகுமாரி, சர்ப ஜெயா தாஸ், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், இணை ஆணயர் சமீரன், துணை ஆணையர் ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையர்கள் அமித், பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, மண்டல குழு தலைவர்கள் ராமுலு, நேதாஜி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பயிற்றுவித்தவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது: போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,CHENNAI ,2023-24 ,Inter-School Games ,Nehru Stadium ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...