×

எடப்பாடியோடு சேர வாய்ப்பே இல்லை அதிமுகவை ஒன்றிணைக்கும் சசிகலா ஆசை நடக்காது: டிடிவி.தினகரன் திட்டவட்டம்

மதுரை: ‘அதிமுகவை ஒன்றிணைக்கும் சசிகலா ஆசை நடக்காது. எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என டிடிவி.தினகரன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மதுரையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைக்குமா என்பதை பாஜவினரிடம்தான் கேட்க வேண்டும். வெற்றி, தோல்வியை தாண்டி அரசியல்ரீதியாக ஓபிஎஸ்சுடன் சேர்ந்து பயணித்து வருகிறோம். அதிமுக இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது. அமமுக – பாஜ கூட்டணியா என்கிறீர்கள். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் சொல்கிறோம். அதிமுக ஒன்றிணையும் என சசிகலா கூறி இருப்பதை கூறுகிறீர்கள். எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிக்க வாய்ப்பில்லை. அமமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் இதில் விருப்பம் இல்லை. அதிமுக இணைப்பு குறித்து சசிகலா எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களாக தங்களை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் ஒன்றிணைவதே விருப்பம். எனக்கு தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை.

நிர்வாகிகள், நண்பர்கள், தொண்டர்கள் என்னை போட்டியிட வேண்டுகின்றனர். இதனை பரிசீலித்து அறிவிப்பேன். பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். இல்லாதபட்சத்தில் அமமுக தனித்து போட்டியிடும். தேனி தொகுதியில் போட்டியிடுவேன் என எதிர்பார்ப்பு இருக்கிறது. முடிவெடுக்கவில்லை. அப்படி வந்தால் அதனை மதுரையில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ராமர் கோயிலால் பாஜவுக்கு வளர்ச்சியா?

டிடிவி.தினகரன் கூறுகையில், ‘தமிழகத்தில் ராமர் கோயில் விவகாரம் எப்படி இருக்கும் என்பது தேர்தலுக்குப் பின்பே தெரியவரும். பாஜ கட்சி மக்கள் மனதில் இடம் பெறுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளின் பலமும் தெரிந்து விடும். பாஜ தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை’ என்றார்.

The post எடப்பாடியோடு சேர வாய்ப்பே இல்லை அதிமுகவை ஒன்றிணைக்கும் சசிகலா ஆசை நடக்காது: டிடிவி.தினகரன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Sasikala ,AIADMK ,Edappadi ,DTV.Thinakaran ,Madurai ,Palaniswami ,AAMK ,General Secretary ,DTV ,Dinakaran ,BJP ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...