×

சமூக நீதிக்காக போராடுவதற்கு நிதிஷ் குமார் தேவையில்லை: பீகாரில் ராகுல் அதிரடி

பூர்ணியா: ‘பீகாரில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். இதற்கு முதல்வர் நிதிஷ்குமார் தேவையில்லை’ என நீதி யாத்திரையில் ராகுல் காந்தி கூறி உள்ளார். பீகாரில் ஆர்ஜேடி, காங்கிரசுடன் இணைந்து மகாகத்பந்தன் எனும் மகா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், 18 மாதத்தில் கூட்டணியை முறித்து மீண்டும் பாஜவுடன் சேர்ந்து 9வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்தியா கூட்டணியிலிருந்தும் நிதிஷ் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில், பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நேற்று மேற்கொண்டார். கூட்டணிக்கு நிதிஷ் துரோகம் செய்ததில் இருந்து மவுனமாக இருந்த ராகுல் நேற்று முதல் முறையாக கருத்து தெரிவித்தார். ரங்பூமி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ‘‘தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்து துறையிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. பீகாரில் சமூக நீதிக்காக மகா கூட்டணி தொடர்ந்து போராடும். அதற்கு எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை.

தலித், ஓபிசிகள், பழங்குடியினர் மற்றும் பிரிவினரின் சரியான மக்கள்தொகையைக் கண்டறிய நாட்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை’’ என்றார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடிய ராகுல், அவர்களைப் போலவே தலையில் துண்டால் முண்டாசு கட்டிக் கொண்டார். ராகுல் பேசுகையில், ‘‘விவசாயிகளின் அச்சத்தை போக்குவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது.

விவசாயிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், உங்கள் நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். இது வெற்று வாக்குறுதி அல்ல. நாங்கள், விவசாயிகளுக்கு ஆதரவான நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வந்துள்ளோம். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான போதுமான விலையை நாங்கள் உறுதி செய்வோம்’’ என வாக்குறுதி அளித்தார்.

The post சமூக நீதிக்காக போராடுவதற்கு நிதிஷ் குமார் தேவையில்லை: பீகாரில் ராகுல் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Rahul ,Bihar ,Mahagatbandhan Alliance ,Chief Minister ,Nitishkumar ,Rahul Gandhi ,RJD ,Congress ,Mahakathbandhan ,
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...