×

நள்ளிரவில் ராஞ்சி திரும்பிய சோரன் மனைவி கல்பனாவை ஜார்க்கண்ட் முதல்வராக்க முடிவு? இன்று விசாரணைக்கு தயார் என அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்த நிலையில் மாயமான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 30 மணி நேரத்திற்கு பின் நேற்று பிற்பகல் ராஞ்சி திரும்பினார். அவரது வீட்டில் இருந்து ரூ.36லட்சம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இருந்து வருகின்றார். இவர் மீது நில மோசடி தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 7 முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள சோரன் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. எனினும் அமலாக்கத்துறையின் இந்த விசாரணை முடிவடையாததால் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டது. ஜனவரி 29 மற்றும் 31ம் தேதிகளில் எப்போது விசாரணைக்கு ஆஜராவார் என்பதை உறுதிப்படுத்துமாறு அமலாக்கத்துறை ஜார்கண்ட் முதல்வரை கேட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு உரிய பதிலளிக்காத நிலையில், ஹேமந்த் சோரன் திட்டமிடப்படாத பயணமாக சனிக்கிழமை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் டெல்லி சாந்தி நிகேதனில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்றனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்ற நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் அங்கு இல்லை. அவர் அங்கிருந்து மாயமாகி இருந்தார். எனினும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 13மணி நேரம் சோமன் வீட்டிலேயே முகாமிட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் ரூ.36லட்சம் ரொக்கம், பினாமி பெயரில் இருந்த பிஎம்டபிள்யூ கார் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்கு பயந்து முதல்வர் தப்பி சென்றதாக தகவல் பரவியது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் சோரன் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது ரகசியமாக இருந்தது. அவரை தொடர்பு கொள்ளவும் முடியாத நிலை நீடித்தது. இதனால் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சேரன் வீட்டிற்கு திரண்டனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் சோரன் வீடு , ராஜ்பவன் மற்றும் தொரந்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அருகே 100 மீட்டர் தூரத்தக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் மூலமாக போராட்டம், பேரணி, கண்டன கூட்டங்கள் நடப்பது தடை செய்யப்பட்டது. சோரன் எங்கிருக்கிறார் என்பது ரகசியமாக இருந்த நிலையில் சுமார் 30 மணி நேரத்திற்கு பின் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று பிற்பகல் ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அவர் முதல் நாள் இரவே தனது வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

இதில், முதல்வர் சோரன் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் 31ம் தேதி (இன்று) பகல் 1மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தனது வாக்குமூலத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதல்வர் வீட்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வரின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார். தற்போதைய அரசியல் சூழல் மற்றும்அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமலாக்கத்துறையினர் தன்னை கைது செய்ய நேரிட்டால் தனது மனைவி கல்பனாவை அவர் முதல்வராக்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் அனைவரும் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post நள்ளிரவில் ராஞ்சி திரும்பிய சோரன் மனைவி கல்பனாவை ஜார்க்கண்ட் முதல்வராக்க முடிவு? இன்று விசாரணைக்கு தயார் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Soran ,Kalpana ,Ranchi ,Jharkhand ,chief minister ,New Delhi ,Hemant Soran ,Delhi ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின்...