×

சென்னையில் வேகமெடுக்கும் 2ம் கட்ட மெட்ரோ பணிகள்: மயிலாப்பூரில் அமையவுள்ள டபுள்டக்கர் வழித்தடம்

* 116 கிலோ மீட்டர் வரை இரவு பகலாக தோண்டப்படும் சுரங்கங்கள் கல்வெர்ட் பாலம் ஓரிரு நாட்களில் இடிப்பு

சிறப்பு செய்தி

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 76 உயர்நிலைப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.

இந்த மூன்று வழித்தடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் 43.1 கிலோ மீட்டருக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. உயர்மட்ட பாதையில், 76 கிலோ மீட்டருக்கு, 80 ரயில் நிலையங்களும், இரண்டு மெட்ரோ பணிமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் எல்லாம் 2026ம் ஆண்டுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில், பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னை நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில், சுரங்கம் தோண்டும் பணிகளும், சென்னையிலிருந்து புறநகருக்கு செல்லும் வழியில், உயர்மட்ட பாதையும் தற்போது அமைக்கபட்டு வருகிறது. அதிகபட்சமாக மாதவரம் சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. 3வது வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மேலும் விரைவில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை பகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில், 4வது வழித்தடத்தில் பிளமிங்கோ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. தொடர்ந்து வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கத்தில் இருந்து (டவுன்லைன்) போட் கிளப் நிலையம் வரை சுரங்கப்பாதை அமைத்து வருகிறது. கழுகு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து (அப்லைன்) திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026ம் ஆண்டில் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாதவரம் பால் பண்ணையிலிருந்து தரமணி வரை சுரங்கப்பாதையாகவும் நேருநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் ரயில் நிலையம் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் மற்றும் அடையாறு மேம்பாலம் ஆகிய 2 பாலங்களும் மெட்ரோ பணிக்காக இடிக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி முதற்கட்டமாக ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பாலம் இடிப்பு பணி ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அருகே இரட்டை சுரங்கப்பாதையில் மிகப்பெரிய அளவில் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே இதுதான் மிகப்பெரிய மற்றும் மிகஆழமான ரயில் நிலையமாக மாறவுள்ளது. இதற்காக பறக்கும் ரயில்நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாயில் உள்ள கல்வெர்டு பாலம் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த பாலமும் இடிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் 4854.4 சதுர மீட்டர் பரப்பளவில் மாதவரம் பால்பண்ணை – சிறுசேரி சிப்காட் மற்றும் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமைய இருக்கிறது. இதன் அருகே உள்ள பறக்கும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தையும் இணைக்க உள்ளது. கபாலீஸ்வரர் கோயிலையும் இணைப்பதால் இந்த மெட்ரோ ரயில் நிலையம் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சுரங்கப்பாதை பணிக்காக பக்கிங்காம் கால்வாய் இடிக்கப்பட உள்ளதால் தற்காலிக மாற்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இடிப்பதற்கான அனைத்து பணிகள் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறியதாவது:

சுரங்கப்பாதை ரயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் பாலத்தின் தூண்கள் வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை ரயில் நிலையம் 35 அடி ஆழத்தில் அமையஉள்ளது. இப்பகுதியில் கடினமான பாறைகள் உள்ளதால் சுரங்கம் தோண்டும் பணி சவாலாக இருக்கும். மயிலாப்பூர் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமான மின்சார கேபிள்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் போன்ற நிலத்தடியில் உள்ளவற்றை மாற்றுப்பாதையில் மாற்றுவது தொடர்பான பணிகள் நடைப்ெபற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அனுமதி கிடைத்தவுடன் பாலம் இடிக்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மயிலாப்பூர் கல்வெர்ட் பாலம் இடிப்பதற்கு மெட்ரோ நிர்வாகத்தின் அனுமதிகோரிய கடிதம் நீர்வளத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீர்வளத்துறையிடம் இருந்து ஆட்சபனை அறிக்கை பெறப்பட்டவுடன் இடிப்பதற்கான அனுமதி வழங்கப்படும். நீர்வளத்துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்’’ என்றனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘‘மயிலாப்பூர் கல்வெர்ட் பாலம் உள்ள பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு நிறைவு பெற்ற நிலையில் இதற்கான விரிவான அறிக்கை சில தினங்களில் தயாரிக்கப்படும். அதனை தொடர்ந்து இந்த அறிக்கை மாநகராட்சி அதிகாரிகளிடம் அளிக்கப்படும்’’ என்றார்.

* 4வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் – பூந்தமல்லி வரையான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்களில் இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

* தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறும்.

* ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

* 4வது வழித்தடம் ஆண்டு டிசம்பருக்குக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளதால் வரும் 2025ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப்பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது.

The post சென்னையில் வேகமெடுக்கும் 2ம் கட்ட மெட்ரோ பணிகள்: மயிலாப்பூரில் அமையவுள்ள டபுள்டக்கர் வழித்தடம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapore ,Special News ,Tucker ,
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு