சந்திரகாந்தக்கல் ஒரு மென் கல் (soft stone) ஆகும். இது யின் – யான் தத்துவத்தில், யின் எனப்படும் பெண்மை இயல்புக்குரிய கல் என்பர். மூன் ஸ்டோன் சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிகேட் ஆகும். சந்திரகாந்தம், வெண்மை நிறத்துடன் இருக்கும். வெண்மை நிறத்தில் நீல ஒளியும் தெரியும். நீலநிறம் அதிகமாக இருக்கக்கூடியதை நீல நிறச் சந்திரகாந்தக்கல் என்போம். சந்திரகாந்தக் கல்லில் வெண்மை நிறம், சாம்பல் நிறம், ஆரஞ்சுநிறம், நீலநிறம், பிங்க் நிறம் போன்ற வர்ணங்கள் கலந்து கிடைக்கின்றது. ஆனால், வெள்ளையில் நீல நிறம் தெரியும் கல்தான் விலை மதிப்புள்ள, பயன் மிகுந்த, மிகச் சிறந்த கல்லாகும்.
யார் அணியலாம்?
சந்திரன், கடக ராசியின் அதிபதி என்பதால், கடக ராசிக்காரர்கள் சந்திரகாந்தக்கல் அணிவது பலன்களைத் தரும். சந்திரதிசை, சந்திரபுத்தி நடப்பவர்கள், சந்திரன் ஜாதகத்தில் நீசமாக இருப்பவர்கள், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம் உடையவர்கள் அணியலாம்.
மனம் அமைதி பெற
சந்திரன், அலைகளோடு தொடர்புடைய கிரகம் என்பதாலும், மனோகாரகன் என்பதாலும், மனம் அமைதியுறவும், நல்ல தூக்கம் வருவதற்கும், வலி குறைந்து சுகானுபவம் தோன்றுவதற்கும் உரிய ரத்தினம் சந்திரகாந்தம் ஆகும்.
குழப்பம் தீரும், தெளிவு பிறக்கும்
சந்திரகாந்தம் அணிவதால், மனம் அமைதி அடைந்து மனதின் குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியாக இருக்கலாம். என்ன முடிவெடுக்கலாம்? யாரைத் திருமணம் செய்யலாம்? என்ற குழப்பங்கள் வரும்போது, அந்த குழப்பங்கள் தீர்ந்து நல்ல முடிவு எடுக்க சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரம் அல்லது சங்கிலி கைகாப்பு ஆகியவற்றை அணிந்து கொண்டு சிந்திக்கலாம். உடம்பிலும் மனதிலும் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேறும்.
பயணங்கள் வெற்றி பெற சந்திரகாந்தக்கல்
சந்திரனோடும் கடல் அலைகளோடும் தொடர்புகொண்டிருப்பதனால், கடல் பயணங்கள் மேற்கொள்கின்றவர்கள், அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை சந்திரகாந்தக் கல்லை கையோடு கொண்டு செல்வது ஒரு மரபு ஆகும். இரவுப் பயணம் மேற்கொள்கின்றவர்களும், சந்திரகாந்தத்தைக் கையோடு கொண்டு சென்றால் அமைதியாக அப்பயணம் அமையும்.
தூக்கம் வருவதற்கு
மூன் ஸ்டோனை, ஸ்லீப் ஸ்டோன் என்றும் ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இன்சொம்னியா என்ற தூக்கமின்மை நோயினால் அவதிப்படுவோர் மனக் குழப்பங்களால் தூக்கம் வராமல் துன்புறுவோர் இச்சந்திரகாந்தக் கல்லை அணிந்து கொண்டு படுத்தால், நல்ல தூக்கம் வரும்.
எப்போது அணியக்கூடாது?
சந்திரகாந்தக் கல்லைப் பகலில் வெயிலில் அணிவது கூடாது. இரவில் அணிவதும், பயணத்தின்போது அணிவதும் சிறப்பு.
உடல் ஆரோக்கியம் பெற
சந்திரகாந்தக் கல் குளிர்ச்சித் தன்மை உடையது. உடம்பில் உள்ள வறட்சியைப் போக்கி குளிர்ச்சி அளிக்கக் கூடியது. சந்திரகாந்தம், உடம்பின் விஷத்தன்மையை குறைக்கும்.
காதல் நிறைவேற உதவும்
காதல் நிறைவேறுவதற்கு சந்திரகாந்தக்கல் அணியலாம். காதலின் குழப்பங்கள் நீங்கி நிரந்தரமான உறுதியான ஒரு முடிவெடுக்க இந்த கல் உதவும். ஐரோப்பாவில், கிரேக்கத் தேவதையான அஃப்ரோடைட் மற்றும் நிலவின் தேவதையான செலினா ஆகிய இரண்டின் பெயரையும் இணைத்து அஃப்ரோசெலின் என்று (மூன்ஸ்டோன்) சந்திரகாந்தக் கல்லுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். அஃப்ரோசெலின் எனப்படும் மூன்ஸ்டோனை திருமணப் பரிசாகக் கொடுக்கும் வழக்கம் வெளிநாடுகளில் உண்டு. காதலர்கள் தங்கள் எதிர்காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு இரவு முழுக்க வாய்க்குள் சந்திரகாந்தக்கல்லை வைத்திருக்கும் பழக்கமும் அங்கு இருந்திருக்கிறது.
எங்கே கிடைக்கிறது?
சந்திரகாந்தக்கல் அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைத்தாலும், மிகச் சிறந்த கற்கள் தென்னிந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் கிடைப்பதாக ரத்னசாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்போது எங்கு அணிய வேண்டும்?
சந்திரகாந்தக் கல்லை தினமும் அணியலாம். இரவு அணிவது மிகச் சிறந்த பலனைத் தரும். வெயிலில் அணிந்து கொண்டு சென்றால் கல்லுக்குள் அதிக வெப்பம் சேரும். வெயில் கல்லைத் தாக்கும்போது அதனுடைய குளிர்ச்சி குறையும். அதனை அணிவதால் நமக்கு கிடைக்கும் பலனும் குறைந்து விடும். அதிகாலை அந்திமாலை நேரத்தில் இந்தக் கல்லை அணியலாம். சந்திரகாந்தக் கல் பதித்த நகையை வலது கை சுண்டு விரலில் அணிய வேண்டும். ஏனென்றால் சுண்டு விரலுக்கு மிகவும் கீழேதான் சந்திரமேடு இருக்கிறது. இங்குதான் பயண ரேகையை நாம் பார்க்க முடியும். எனவே, சுண்டுவிரலில் அணிய வேண்டும்.
பகைக் கற்கள்
சந்திரனுக்கு பகைக் கிரகமான செவ்வாய் மற்றும் ராகு, கேதுக்களுக்கு உரிய கற்களுடன் சந்திரகாந்தக் கல்லை சேர்த்து அணியக்கூடாது. இதனால் சந்திரகாந்தம் தன் சக்தியை இழந்துவிடும். செவ்வாய்க்குரிய ரூபி எனப்படும் மாணிக்கக்கல், ராகு கேதுக்களுக்கு உரிய ஒப்பல் (opal), குவார்ட்ஸ் (quartz) ஆகியவற்றுடன் சேர்த்து அணியக்கூடாது.
நீலநிறச் சந்திரகாந்தம்
மேலை நாடுகளில் 21 வருடத்திற்கு ஒருமுறைதான் நீல நிற சந்திரகாந்தக் கல்லை கடல் அலைகள் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் என்று நம்பி உள்ளனர். நீலநிறச் சந்திரகாந்தக்கல், ஒரு கேரட் சில நூறு டாலர்கள் விலையாகும். இந்தக் கல் அணிவதால் தோல் மினுமினுப்பாகவும், வழவழப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்கும். தலை முடி மென்மையாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கும். கண் ஒளியுடனும் பார்வை கூர்மையுடனும் இருக்கும். பித்தநீர் சுரக்கும் கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும். கணையம் சிறப்பாகச் செயல்படும். நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வெண்மை ஒளியில் சற்று நீலம் கலந்திருக்கும் சந்திரகாந்தக் கல்லை வாங்கி அணிவது பல வகையிலும் நன்மை தருவதாகும்.
தொகுப்பு: பிரபா எஸ். ராஜேஷ்
The post சந்திரகாந்தம் எனப்படும் மூன் ஸ்டோன் appeared first on Dinakaran.