- மைலாபூர்
- டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை
- சென்னை
- டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்
- மெரினா காமராஜர் சாலை
- மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை
சென்னை, ஜன.30: மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மாணவன் அதிவேகமாக ஓட்டிய ஜீப் மோதி, 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, அவர்களை மிரட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் இருந்து, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக, நுங்கம்பாக்கம் நோக்கி சொகுசு ஜீப் ஒன்று, நேற்று முன்தினம் இரவு மின்னல் வேகத்தில் சென்றது. வி.எம்.தெரு சந்திப்பு அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற பைக் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது.
அதிவேகமாக ஜீப் வந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதிய பைக் உடன் சிறிது தூரம் சாலையிலேயே இழுத்து சென்றது. இதில், பைக்கில் வந்த 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஜீப் ஓட்டி வந்தவர் மற்றும் ஜீப்பில் இருந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அப்போது விபத்து ஏற்படுத்திய நபர்கள் பொதுமக்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். தகவலறிந்து போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து வந்து அவர்கள் தப்பி செல்லாதபடி மடக்கி பிடித்தனர்.
பின்னர், விபத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடிய 2 வாலிபர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஜீப் ஓட்டிய வாலிபர் போதையில் இருந்தாரா என்று சோதனை நடத்தினர். மேலும், விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்திய நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேடவாக்கம் அருகே உள்ள சந்தோஷபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து சென்றது தெரியவந்தது. விபத்தில் காயமடைந்த மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த அஜய் (19), நிதிஷ் (19) ஆகியோர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அதிவேகமாக மாணவன் ஓட்டிய ஜீப் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்: பொதுமக்களை மிரட்டிவிட்டு தப்ப முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.